98/2 டூ 114க்கு அவுட்.. ஃபைனலில் சொதப்பிய இலங்கை.. பாகிஸ்தான் சொந்த மண்ணில் சாதனை வெற்றி

PAK vs SL
- Advertisement -

பாகிஸ்தான், இலங்கை ஜிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. அத்தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தான் 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல இலங்கை அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளுடன் 2வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு சென்றது.

ஜிம்பாப்வே அணி 1 வெற்றி 3 தோல்விகளைப் பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த நிலைமையில் இறுதிப்போட்டி நவம்பர் 29ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

சொதப்பிய இலங்கை:

மறுபுறம் கமில் மிஷாரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். எதிர்ப்புறம் வந்த குசால் மெண்டிஸ் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 14 (18) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மிஸாரா அரை சதத்தை அடித்ததால் இலங்கை அணி 98/2 என்ற நல்ல நிலைமையில் விளையாடிக் கொண்டிருந்தது.

ஆனால் அப்போது மிஸாரா 59 (47) ரன்களில் அவுட்டானது பெரிய திருப்புமுனையாக மாறியது. ஏனெனில் அடுத்த ஓவரிலேயே குசால் பெரேரா 1 (6), பவன் ரத்நாயகே 8 (11) ரன்களில் அப்ரார் அகமது சுழலில் அவுட்டானார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சனாக்கா 2 (7) , ஜனித் லியனகே 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:

கடைசியில் கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹசரங்கா 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்களையும் ஒற்றை இலக்கத்தில் காலி செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் இலங்கையை வெறும் 114 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது நவாஸ் 3, ஷாகின் அப்ரிடி 3, அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு ஃபர்கான் 23, சாய்ம் ஆயுப் 36 ரன்கள் குவித்து அசத்தினார்கள். மிடில் ஆர்டரில் கேப்டன் சல்மான் ஆகா 14, பகார் ஜமான் 3 ரன்களில் அவுட்டானாலும் பாபர் அசாம் மெதுவாக விளையாடி 37* (34) ரன்கள் எடுத்தார். இறுதியில் உஸ்மான் கான் 3* ரன்கள் எடுத்த உதவியுடன் பாகிஸ்தான் போராடி 18.4 ஓவரில் 118/4 ரன்களை எடுத்தது.

இதையும் படிங்க: 3 சாதனைகளை தென்னாப்பிரிக்க தொடரில் நிகழ்த்த காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் ஒரு முத்தரப்பு தொடரின் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதற்கு முன் வரலாற்றில் சொந்த மண்ணில் விளையாடிய 3 ஒருநாள் முத்தரப்பு தொடர்களில் பாகிஸ்தான் தோல்வியை மட்டுமே சந்தித்திருந்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை பந்து வீச்சில் போராடியும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

Advertisement