
கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27இல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த கோப்பையை வெல்வதற்காக அதில் பங்கேற்கும் 6 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
கடைசியாக இவ்விரு அணிகளும் இதே துபாய் மண்ணில் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து சரித்திரத்தை மாற்றி எழுதியது. அதனால் அவமானத்திற்குள்ளான இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் தக்க பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
திரும்பும் கோலி:
இருப்பினும் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் கடைசியாக நடந்த 2018 ஆசிய கோப்பையை வென்று நடப்புச் சாம்பியனாகவும் களமிறங்கும் இந்தியா இம்முறையும் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் டி20 உலக கோப்பையில் விளையாடப்போகும் இறுதிகட்ட அணி இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
அப்படிப்பட்ட நிலையில் கடந்த 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் சுமாரான பார்மில் தவிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டாகி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்படுவதால் அணியிலிருந்து நீக்குமாறு கபில்தேவ் போன்ற முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இருப்பினும் பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களின் ஆதரவையும் பெற்றுள்ள அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க இந்த ஆசிய கோப்பையில் பார்முக்கு திரும்பி மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுபோன்ற விமர்சனங்களை உடைத்து டி20 உலக கோப்பையில் இடம் பிடிக்க விராட் கோலி இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்று தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா அதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டும் அவர் பார்முக்கு திரும்பி பெரிய அளவில் ரன்களை சேர்த்து விடக்கூடாது என்று நாட்டுப்பற்றுடன் பேசியுள்ளார்.
பார்முக்கு வரக்கூடாது:
இது பற்றிய சமீபத்திய தனது யூடியுப் வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று நினைத்தால் விராட் கோலி இந்த ஆசிய கோப்பையில் அபாரமான கம்பேக் கொடுக்க வேண்டும். அவர் அணியில் ஆழமான கொக்கி போடும் வகையில் அழுத்தமான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் நீங்கள் அணியில் அவரைப் போன்ற பெரிய வீரரை வெறுமனே வைத்திருந்து அதன்பின் பெஞ்சில் அமர வைப்பது கடினமான முடிவாகும். இருப்பினும் அவர் இந்த சுமாரான பார்மில் தொடர்வார் என்று பாகிஸ்தான் நம்புகிறது. ஏனெனில் அவரைப் போன்ற ஒருவர் பழைய பார்முக்கு திரும்பினால் மிகவும் ஆபத்தானவராக மாறி விடுவார்” என்று கூறினார்.
முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடிய விராட் கோலி ஆகிய மூவரையும் தனது அபார பந்துவீச்சால் காலி செய்து வெற்றி பெற உதவிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி இம்முறை காயத்தால் ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இந்த முக்கிய தொடருக்கு முன்பாக சமீபத்திய இலங்கை தொடரில் அவரை விளையாட வைத்து தேவையற்ற பணிச்சுமையை கொடுத்து காயப்பட வைத்த அணி நிர்வாகத்தை டேனிஷ் கனேரியா விமர்சித்துப் பேசியது பின்வருமாறு.
“ஷாஹீன் இப்போதும் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் உங்களது துருப்புச்சீட்டு பவுலரை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டாம் என்று நான் தொடர்ந்து பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அதனால் இது போன்ற முக்கிய போட்டியில் காயத்தை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. தற்போது பாகிஸ்தான் அணியுடன் நெதர்லாந்து ஒருநாள் தொடரில் இருக்கும் அவர் 3வது போட்டியிலும் விளையாடாமல் போனால் ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்படும். அது இந்தியாவுக்கு சாதகமாகவும் பாகிஸ்தானுக்கு பாதகமாகவும் அமையும்” என்று கூறினார்.