பாகிஸ்தான் வலுவான டீம், ஆசிய கோப்பையை வென்று உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கும் – முன்னாள் பாக் வீரர் உறுதி

T20
- Advertisement -

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பிரச்சனை காரணமாக கடந்த பல வருடங்களாக நேருக்கு நேர் போட்டிகளில் மோதிக் கொள்ளாமல் இருந்து வருகின்றன. அதனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர்களில் மட்டும் இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளை பார்ப்பதற்கு முன்பை விட பல மடங்கு மவுசு கூடியுள்ளது. ஏனெனில் விளையாட்டு என்பதையும் தாண்டி கிரிக்கெட்டை கௌரவமாக கருதும் இவ்விரு நாடுகளும் அதில் வெற்றி பெறுவதற்காக முழு மூச்சுடன் மோதிக் கொள்வதால் அந்த போட்டி முழுவதிலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

- Advertisement -

அந்த அளவுக்கு அனல் பறக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளை கடந்த 10 வருடங்களாக வருடத்திற்கு ஒருமுறை உலக கோப்பையில் மட்டுமே பார்க்க முடிகிறது. மேலும் உலக கோப்பை என்றாலே என்னதான் தரமான வீரர்களை வைத்திருந்தாலும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பாகிஸ்தானை பந்தாடும் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் 1992 முதல் 2019 வரை நடைபெற்ற அத்தனை உலக கோப்பை போட்டிகளிலும் பாகிஸ்தானை மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா உலக கோப்பைகளில் அந்த அணியை அடக்கி ஆண்டு வந்தது.

தோற்கடித்த பாகிஸ்தான்:
ஆனால் கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான் பேட்டிங்கிலும் அசத்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்று வரலாற்று தோல்வியை பரிசளித்தது. பரம எதிரியிடம் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியடைந்து அவமானத்தை சந்தித்தாலும் தங்களை தோற்கடிக்க எதிரிக்கு 30 வருடங்கள் தேவைப்பட்டதை நினைத்து எப்போதுமே பெருமைப்படும் அணியாகவே இந்தியா இருக்கிறது.

INDvsPAK

இருப்பினும் அந்த வரலாற்று தோல்வியை மறக்காத இந்தியா அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அத்துடன் இந்த வருடம் இலங்கையில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் நடைபெறும் ஆசிய கோப்பையிலும் இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை நடைபெறும் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடராக நடைபெற உள்ளதால் ஒரே வருடத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2 முறை மோதும் பொன்னான வாய்ப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

வலுவான டீம்:
இந்நிலையில் இந்தியாவைவிட பாகிஸ்தானில் தரமான வீரர்கள் இருப்பதால் ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து தங்களது அணி கோப்பையை வெல்லும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார். 2021இல் துபாயில் நிகழ்ந்த மேஜிக்கை மீண்டும் ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் செய்து காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா ஒரு நல்ல அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்சமயத்தில் பாகிஸ்தான் விளையாடுவதை விட வேறு எந்த அணியும் எடுத்துக்காட்டும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. சாகின் அப்ரிடி, பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் சிறந்த வீரர்களாக தற்போது ஐசிசியால் பெயரிடப் பட்டுள்ளார்கள்”

latif

“எனவே 2022 ஆசிய கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று நான் நம்புகிறேன். அதிலும் 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றி பாகிஸ்தானின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. 2022 ஆசிய கோப்பையில் இதர அணிகள் போட்டிக்கு வந்தாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் தான் முதன்மையான போட்டியாளர்களாக இருப்பார்கள்” என்று கூறினார்.

கடந்த 2021இல் சர்வதேச டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், சாஹீன் அப்ரிடி ஆகிய 3 பாகிஸ்தான் வீரர்கள் 2021 வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ஐசிசியின் விருதுகளை வென்று சாதனை படைத்தார்கள். ஆனால் இந்தியா சார்பில் எந்த ஒரு வீரரும் அந்த விருதை வாங்கவில்லை. அந்த வகையில் ஐசிசி விருதுகளை வென்ற தரமான வீரர்கள் தங்களது அணியில் இருப்பதால் ஆசிய கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரசித் லதீப் அந்த வெற்றி நடை டி20 உலக கோப்பையிலும் தொடரும் என்று கூறியுள்ளார்.

INDvsPAK

ஆனால் ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை 15 போட்டிகளில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா 8 முறை வென்று வலுவான அணியாக உள்ளது. 5 போட்டிகளில் தோற்றது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. அதிலும் இம்முறை 20 ஓவர் தொடராக நடைபெற உள்ள நிலையில் இதற்குமுன் கடந்த 2016இல் 20 ஓவராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனவே இந்த வருட ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்து அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் கடந்த டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பழி தீர்க்கும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Advertisement