ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் அமெரிக்கா வீழ்த்தியது. டாலஸ் நகரில் ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 44, சடாப் கான் 40 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது.
அதைத் துரத்திய அமெரிக்கா ஆண்ட்ரீஸ் கவுஸ் 35*, கேப்டன் மோனக் படேல் 50, ஆரோன் ஜோன்ஸ் 36*, நிதிஷ் குமார் 14* ரன்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் அமெரிக்காவும் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணிக்கு ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் சூப்பர் ஓவரை வீசிய முகமது அமீர் 8 ஒய்ட் ரன்களை கொடுத்தார்.
சொதப்பல் பாகிஸ்தான்:
அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்த நேத்ராவல்கர் அமெரிக்காவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மறுபுறம் மொத்தமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே தோல்வியை பதிவு செய்து அவமானத்தை சந்தித்தது.
முன்னதாக இந்தப் போட்டியில் முக்கிய நேரத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர் அசாம் கான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். சுமாரான ஃபிட்னஸ் காரணமாக இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தாத அவருக்கு முன்னாள் வீரரின் மகன் என்பதால் இந்த உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பில் டக் அவுட்டாகி பெவிலியன் சென்ற அவரை மைதானத்தில் இருந்த சில பாகிஸ்தான் ரசிகர்கள் வெறுப்பு காரணமாக வம்பிழுத்தனர்.
அதனால் கோபமடைந்த அசாம் கான் ரசிகர்களிடம் சில வார்த்தைகளை சொல்லி சண்டையில் ஈடுபட்ட வாக்கிலேயே அறைக்குள் சென்றார். அதைத்தொடர்ந்து அமெரிக்கா பேட்டிங் செய்த இன்னிங்க்ஸில் சாகின் அப்ரிடி வீசிய 3வது ஓவரின் ஒரு பந்தை கேப்டன் மோனக் படேல் அதிரடியாக விளையாட முயற்சித்து எட்ஜ் கொடுத்தார். அந்த பந்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஃஇப்திகார் அகமது ஆகியோரிடையே சென்றது.
இதையும் படிங்க: மாற்றியது ஏன்? அந்த பாகிஸ்தான் பவுலர் பந்தை சேதப்படுத்துனாரு.. ஐசிசிக்கு தெ.ஆ வீரர் கேள்வி
அப்போது ரிஸ்வான் பிடிப்பார் என்று இப்திகார் அகமதும் அவர் பிடிப்பார் என்று ரிஸ்வானும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர பந்தை பிடிக்கவில்லை. அந்த நேரத்திற்குள் அவர்களுக்கிடையே புகுந்த பந்து பவுண்டரி சென்றதால் சாகின் அப்ரிடி கடுப்பாக சென்றார். வரலாற்றில் இதற்கு முன் இப்படி சோயப் மாலிக் – சயீத் அஜ்மல் போன்ற நிறைய பாகிஸ்தான் வீரர்கள் பல கேட்ச்களை கோட்டை விட்டுள்ளனர். அந்த வகையில் இப்போட்டியில் ரிஸ்வான் – இப்திகார் ஆகியோர் அதே பழைய காமெடியை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.



