PAK vs ENG : இதற்காகவா 17 வருசம் காத்திருந்திங்க – பாபர் அசாமை கலாய்க்கும் ரசிகர்கள், என்ன நடந்தது

- Advertisement -

பாகிஸ்தானுக்கு 17 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அங்கு 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்றது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று துவங்கி இந்த தொடரில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக மோதி வென்று வந்தன. அதனால் 6 போட்டிகளின் முடிவில் 3 – 3 என சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 7வது போட்டி செப்டம்பர் 2ஆம் தேதியன்று கராச்சியில் நடைபெற்றது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 209/3 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அலெஸ் ஹேல்ஸ் 18, பிலிப் சால்ட் 20, பென் டூக்கெட் 30 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் 3வது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடி காட்டிய டேவிட் மாலன் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 78* (47) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியாக இருந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46* (29) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். பாகிஸ்தான் சார்பில் ஹஸ்னைன் மட்டும் சிறப்பாக பந்து வீசி 1 விக்கெட் எடுத்தார்.

- Advertisement -

சொதப்பிய பாகிஸ்தான்:
அதை தொடர்ந்து சொந்த மண்ணில் தலை நிமிர 210 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முதல் ஓவரியிலேயே கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 5/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு ஒருபுறம் மசூட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 56 (43) ரன்கள் எடுக்க எதிர்ப்புறம் இப்பிதிகர் அஹமத் 19, குஷ்தில் ஷா 27, ஆசிப் அலி 7, முகமத் நவாஸ் 9 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142/8 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் 67 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வி 4 – 3 (7) என்ற கணக்கில் கோப்பையை தாரை வார்த்தது. மறுபுறம் கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தது போல ஆரம்பம் முதலே கச்சிதமாக பந்து வீசிய இங்கிலாந்து உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் சாய்த்து மிகப்பெரிய புத்துணர்ச்சி வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
பொதுவாகவே பந்து வீச்சில் பலமான அணியாக கருதப்படும் பாகிஸ்தான் இந்த தொடரில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அத்துடன் முஹம்மது ரிஸ்வான் – பாபர் அசாம் ஆகிய டாப் ஆர்டரை மட்டும் சார்ந்திருக்கும் பாகிஸ்தானின் பலவீனம் இந்த தொடரில் அம்பலமானது. ஏனெனில் சமீப காலமாகவே தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் திண்டாடும் அந்த அணியின் உண்மையான பலவீனத்தை இங்கிலாந்து பவுலர்கள் இந்த தொடரில் காட்டினர்.

மேலும் இந்த முக்கிய போட்டியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் பாபர் அசாம் 12வது ஓவரில் டேவிட் மாலன் வெறும் 29 ரன்களில் இருந்த போதும் 16வது ஹரி ப்ரூக் 24 ரன்களில் இருந்த போதும் கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்டது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதனால் ஏராளமான ரசிகர்கள் கேப்டனே இப்படி ஒன்றுக்கு 2 தவறு செய்தால் இதர வீரர்கள் என்ன செய்வார்கள் என்று கலாய்க்கிறார்கள். மேலும் வழக்கம் போல இப்படி குளறுபடியான சொதப்பல்களை செய்து தோற்பதற்காகவா 17 வருடங்கள் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட காத்திருந்தீர்கள் என்றும் ரசிகர்கள் பாகிஸ்தானை சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் ஆசிய கோப்பையில் இலங்கையிடம் மண்ணை கவ்விய அந்த அணி கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியவுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்றது. அதனால் இப்படி சொந்த மண்ணிலேயே திணறும் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்ற கவலையில் பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களுமே அந்த அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement