PAK vs NZ : 48 மணி நேரத்தில் பாகிஸ்தானின் மகுடத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய நியூஸிலாந்து – பாக் ரசிகர்கள் சோகம்

- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை மழைக்கு மத்தியில் 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் முக்கிய வீரர்கள் 2வது தர அணியை அனுப்பியதாக விமர்சித்த அப்துல் ரசாக் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு டாம் லாதம் தலைமையிலான இளம் நியூஸிலாந்து அணி பதிலடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அந்த 2 அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின.

ஆனால் இம்முறை அந்த தொடரின் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் முதல் போட்டிகளிலும் 4 தொடர் வெற்றிகளை பதிவு செய்து ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. குறிப்பாக கடந்த வருடம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் நீண்ட நாட்கள் கழித்து முதல் முறையாக ஒரு தொடரை வென்று தங்கள் மீதான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்தது.

- Advertisement -

நொறுக்கிய நியூஸிலாந்து:
அதை விட அந்த தொடர் வெற்றிகளால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் வரலாற்றில் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் புதிய சரித்திரம் படைத்தது. கடந்த 1973 முதல் உலக கோப்பை வென்ற இம்ரான் கான், இன்சமாம் போன்ற மகத்தான கேப்டன்கள் தலைமையில் விளையாடியும் எட்ட முடியாத அந்த உச்சத்தை பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் முதல் முறையாக எட்டியதால் அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த நிலையில் மே 7ஆம் தேதி கராச்சியில் நடைபெற்ற அத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 49.3 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 299 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக வில் எங் 87 ரன்களும் டாம் லாதம் 59 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 300 ரன்களை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வென்று 5 – 0 என ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் பகார் ஜமான் 33, ஷான் மசூட் 7, தன்னுடைய 100வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பாபர் அசாம் 1, ரிஸ்வான் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் மிடில் ஆர்டரில் ஆகா சல்மான் 57 (57) ரன்களும் இப்திகார் அகமது 94* (72) ரன்கள் எடுத்தும் 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் 255 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அட்டகாசம் செய்த நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஹென்றி ஷிப்லே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 4 – 1 (5) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தாலும் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து இத்தொடரை திருப்திகரமாக நிறைவு செய்தது. அதை விட 4வது போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளை போலவே மிகச்சரியாக 113 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் அதை குறைந்த போட்டிகளில் பதிவு செய்ததால் முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தது.

- Advertisement -

ஆனால் இந்த தோல்வியால் 5வது போட்டியின் முடிவில் ஒரு புள்ளியை இழந்த பாகிஸ்தான் நேற்றிரவு அப்டேட் செய்யப்பட்ட புதிய ஐசிசி ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தை இழந்தது மட்டுமின்றி இந்தியாவைத் தாண்டி 3வது இடத்திற்கு சரிந்தது. அதனால் மீண்டும் முதலிடத்தை ஆஸ்திரேலியா தன்வசமாக்கி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : இதுக்கு தான் வந்திங்களா? ஒரு மேட்ச்ல அடிச்சுட்டா மட்டும் போதாது – ஹைதராபாத் வீரரை விளாசிய சேவாக்

அந்த வகையில் மே 5ஆம் தேதி இரவு உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியாக முன்னேறி சரித்திரம் படைத்த பாகிஸ்தானின் மணிமகுடத்தை அடுத்த 48 மணி நேரத்தில் நியூசிலாந்து சல்லி சரியாக உடைத்தது. அதனால் ஏமாற்றமடைந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சோகமான கருத்துக்களை தெரிவிப்பதுடன் மீண்டும் தங்களது அணி விரைவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Advertisement