
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 16ஆம் தேதி கால்லே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தனஞ்செயா டீ சில்வா சதமடித்து 112 ரன்களும் ஏஞ்சேலோ மேத்தியூஸ் 64 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 461 ரன்கள் குவித்து தக்க பதிலடி கொடுத்தது. சொல்லப்போனால் அப்துல்லா சபிக் 19, இமாம்-உல்-ஹக் 1, ஷான் மசூத் 39, பாபர் அசாம் 13 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 73/4 என ஆரம்பத்திலே சரிந்த அந்த அணியை மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று தனி ஒருவனாக தூக்கி நிறுத்திய சௌத் ஷகீல் 19 பவுண்டரியுடன் 208 ரன்கள் குவித்து இலங்கை மண்ணில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரராக மாபெரும் சாதனை படைத்த நிலையில் அவருடன் சல்மான் ஆகா தனது பங்கிற்கு 83 ரன்கள் எடுத்தார்.
நிகழ்ந்த மிராக்கிள்:
இலங்கை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளும் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை மீண்டும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 279 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே 20, ஏஞ்சிலோ மேத்யூஸ் 7, சண்டிமால் 28 என முக்கிய வீரர்கள் பெரிய ரண்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மீண்டும் தனஞ்செயா டீ சில்வா 82 ரன்களும் மதுசங்கா 52 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நோமன் அலி, அப்ரார் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
இறுதியில் 130 ரன்கள் என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு சபிக் 8, ஷான் மசூத் 7, கேப்டன் பாபர் அசாம் 24, சர்பராஸ் அகமது 1 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் ஒருபுறம் நங்கூரமாக நின்று 50* ரன்களும் சௌத் ஷகீல் 30 ரன்களும் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் சொந்த மண்ணில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு குறைந்த இலக்கை நிர்ணயித்த இலங்கை சார்பில் அதிகபட்சமாக பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.
அந்த வகையில் சிறப்பான வெற்றி பெற்ற பாகிஸ்தான் 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை விட இந்த வெற்றியால் கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளை நிறுத்தி பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு பெற்றுள்ளது. சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2022 ஜூலை 20ஆம் தேதி இதே இலங்கைக்கு எதிராக இதே கால்லே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அதன் பின் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சரமாரியாக அடி வாங்கி 3 – 0 (3) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க:ஐபிஎல் பணத்தை தியாகம் செய்து வெ.இ அணிக்காக உலக கோப்பையில் விளையாட தயார் – நட்சத்திர வீரர் அறிவிப்பு
அதே போல நியூசிலாந்துக்கு எதிராகவும் நடைபெற்ற சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 0 – 0 (2) என்ற கணக்கில் டிரா மட்டுமே செய்த அந்த அணி கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. அந்த நிலையில் ஒரு வழியாக மிகச் சரியாக 365 நாட்கள் கழித்து அதே இலங்கையை அதே மைதானத்தில் தோற்கடித்துள்ள பாகிஸ்தான் மிராக்கிள் வெற்றியை பெற்றுள்ளதாக நிறைய ரசிகர்கள் அந்த அணியை வழக்கம் போல சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.