இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் 14ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 50 ஓவரில் போராடி 288/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமரவிக்ரமா 42, ஜனித் லியனகே 54, கமிண்டு மெண்டிஸ் 44, ஹஸரங்கா 37* ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது, ஹரிஷ் ரவூப் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக 289 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த சாய்ம் ஆயுப் 33 (25) ரன்கள் அடித்து அவுட்டானார்.
ஒருவழியாக பாபர் அசாம் சதம்:
அடுத்து வந்த பாபர் அசாம் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட மற்றொரு துவக்க வீரர் பகார் ஜமான் அரை சதத்தை அடித்து 78 (93) ரன்களில் பெவிலியன் சென்றார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய பாபர் அசாம் அரை சதத்தை அடித்து நிதானமாக விளையாடினார்.
எதிர்புறம் வந்த முகமது ரிஸ்வான் தமது பங்கிற்கு நிதானமாக விளையாடி பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய பாபர் அசாம் 8 பவுண்டரியுடன் சதத்தை அடித்து 102* (119) ரன்கள் குவித்தார். அதனால் 807 நாட்கள் 83 சர்வதேச போட்டிகள் கழித்து ஒருவழியாக அவர் சதத்தை அடித்தது பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
பாகிஸ்தான் வெற்றி:
கடைசியாக 2023 ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆசியக் கோப்பையில் நேபாளுக்கு எதிராக சதத்தை அடித்திருந்த அவர் கடந்த இரண்டரை வருடங்களாக சதமடிக்க முடியாமல் திண்டாடி வந்தார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் இப்போட்டியில் சதத்தை அடித்து அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். இறுதியில் அவருடன் இணைந்து விளையாடிய முகமது ரிஸ்வான் 51* (54) ரன்கள் எடுத்ததால் 48.2 ஓவரிலேயே 289/2 ரன்களை அடித்த பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: அப்பா ஏன் திட்டி வளத்தார்ன்னு இப்போ தான் புரியுது.. கேட்ச் விட்டும் 144 ரன்ஸ் அடிக்க இதான் காரணம்.. சூர்யவன்சி பேட்டி
அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்ற பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இலங்கையை தோற்கடித்துள்ளது. இந்தப் போட்டியையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. பாபர் அசாம்/சயீத் அன்வர்: தலா 20
2. முகமது யூசுப்: 15
3. பகார் ஜமான்/முகமது ஹபீஸ்: தலா 11



