
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
மறுபுறம் நிதானமாக விளையாடிய ஃபகார் ஜாமான் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 5 ரன்னில் அவுட்டாக்கிய ஹசரங்கா எதிர்ப்புறம் நிதானமாக விளையாடிய பாபர் அசாமையும் 29 ரன்னில் கிளீன் போல்டாக்கினார். அதனால் 95/4 என பாகிஸ்தான் தடுமாறிய போது ஜோடி சேர்ந்த சல்மான் ஆகா – ஹுசைன் தாலத் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள்.
பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் வரை நிதானமாக விளையாடி அந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடியது. 5வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் தாலத் அரை சதத்தை அடித்து 62 (63) ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி 36* (23) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார்.
எதிர்ப்புறம் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய சல்மான் ஆகா 9 பவுண்டரியுடன் தன்னுடைய 2வது சதத்தை அடித்து 105* (87) ரன்கள் குவித்தார். அதனால் 50 ஓவரில் பாகிஸ்தான் 299/5 ரன்கள் குவித்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக வணிந்து ஹஸரங்கா 3 விக்கட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இலங்கைக்கு 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த கமில் மிஸ்ராவை 38 ரன்னில் அவுட்டாக்கிய ஹரிஷ் ரவூப் அடுத்து வந்த குசால் மெண்டிஸை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.
அதோடு நிற்காத அவர் அடுத்த ஓவரில் மறுபுறம் நிதானமாக விளையாடிய நிசாங்காவையும் 29 ரன்னில் காலி செய்தார். அதனால் 90/3 என தடுமாறிய இலங்கைக்கு மிடில் ஆர்டரில் சமரவிக்ரமா 39, கேப்டன் அசலங்கா 32, ஜனித் லியனகே 28 ரன்கள் மட்டுமே எடுத்தனர். லோயர் ஆடரில் கமிண்டு மெண்டிஸ் 9, சமீரா 7 ரன்னில் அவுட்டானார்கள். இருப்பினும் வணிந்து ஹசரங்கா அதிரடியாக விளையாடி 7 பவுண்டரியுடன் 59 (51) ரன்கள் குவித்து போராடி முக்கிய நேரத்தில் அவுட்டானார். கடைசி நேரத்தில் தீக்சனா 2 பவுண்டரியுடன் 21* (18) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதனால் 50 ஓவரில் 293/9 ரன்களை மட்டுமே எடுத்த இலங்கை போராடி தோற்றது.
இதையும் படிங்க: கண்டு பிடிக்கப்பட்ட ஆசியக் கோப்பை.. இந்தியாவிடம் தராமல் அடம் பிடிக்கும் பாகிஸ்தான் தலைவர் நக்வி
மறுபுறம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக தங்களது மிகச்சிறிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன் 1989 லக்னோ போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4, பஹீம் அஸ்ரப் 2, நாசீம் ஷா விக்கெட்டுகள் எடுத்தனர்.