90க்கு ஆல் அவுட்.. நியூஸிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்.. கிங் கோலியை முந்தி ரிஸ்வான் உலக சாதனை

- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான இரண்டாவது தர இளம் அணி களமிறங்கியுள்ளது. ஏனெனில் ரச்சின் ரவீந்திரா, ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட நட்சத்திர நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.

அந்த நிலையில் துவங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி ஏப்ரல் 20ஆம் தேதி ராவில்பிண்டில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.1 ஓவரில் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:
டிம் ஷைபர்ட் 12, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 4, ஜிம்மி நீசம் 1 முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க் சேப்மேன் 19 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 3, சடாப் கான் 2, அப்ரார் அஹ்மத் 2, விக்கெட்டுகள் எடுத்தனர்.

அவர்களுடன் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள மூத்த வீரர் முகமது அமீர் 3 ஓவரில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து 91 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 4, கேப்டன் பாபர் அசாம் 14 (13), உஸ்மான் கான் 7 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார்.

- Advertisement -

ஆனால் 3வது இடத்தில் களமிறங்கிய நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 45* (34) ரன்கள் குவித்தார். அவருடன் இர்பான் கான் 18* (18) ரன்கள் எடுத்ததால் 12.1 ஓவரிலேயே 92/3 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. நியூசிலாந்து சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, பென் லிஸ்டர் தலா ஒரு விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: பவர்பிளேல ஒன்னும் பண்ண முடியல.. ஆனா அதுக்கு அப்புறம்.. டெல்லி அணியை வீழ்த்தியது குறித்து – கம்மின்ஸ் பேட்டி

அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் அடித்த 45 ரன்களையும் சேர்த்து பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 79 இன்னிங்ஸில் 3026 ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலி, பாபர் அசாமின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி, பாபர் அசாம் ஆகிய இருவரும் தலா 81 இன்னிங்சில் 3000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement