ஏற்கனவே பாகிஸ்தான் ஏ டீம் கங்குலி தலைமையிலான இந்தியாவை தோற்கடிச்சுருக்கு ஆனால் – முன்னாள் பாக் வீரர் கருத்து

IND vs PAK 2012
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் நடைபெறும் உலகக் கோப்பை பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றதால் இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் அணி களமிறங்கியது. அதில் லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் போராடியும் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் – இஷான் கிசான் ஆகியோரது அசத்தலான ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்க டெல்லியில் நடைபெற்ற 3வது போட்டியில் அனலாக பந்து வீசிய இந்தியா தென் ஆப்பிரிக்காவை வெறும் 99 ரன்களுக்குள் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை முத்தமிட்டது. அதுவும் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக 100 ரன்களுக்குள் சுருட்டி சாதனை படைத்த இந்த இளம் அணி தங்களை ஏராளமான உலகத்தரம் வாய்ந்த இளம் வீரர்களை கொண்ட அணி என்றும் சொந்த மண்ணில் கில்லி என்பதையும் நிரூபித்தது.

- Advertisement -

ஆச்சர்யப்பட ஒன்னுமில்ல:
அதை விட கடந்த ஒரு வருடமாகவே இது போல் ஒரே நேரத்தில் 2 இந்திய அணிகள் விளையாடி வெற்றி வாகை சூடி வருவதால் திறமையும் வருங்காலமும் சிறப்பாக உள்ளதாக இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கங்குலி தலைமையிலான இந்தியா 5 ஒருநாள் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. 1999இல் நடந்த கார்கில் போருக்குப்பின் அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அந்த சுற்றுப்பயணத்தில் 3 – 2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் 2 – 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் இந்தியா வென்றது.

ஆனால் அந்த சுற்றுப்பயணத்தின் ஆரம்பத்தில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்ற ஒரு பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 335/6 ரன்கள் குவித்தது. அதை துரத்திய பாகிஸ்தான் ஏ அணியை உமர் சதமடித்து 104 ரன்களும் இம்ரான் நசீர் அதிரடியாக 65 (32) ரன்களும் குவித்து 24 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் கடாபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதன்மையான இந்திய அணியை பாகிஸ்தான் ஏ அணி அப்போதே அசால்டாக பந்தாடியதாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் இப்போது இளம் இந்திய அணி சுமாரான தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்ததில் எந்த ஆச்சரியமுமில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் 2004ஆம் ஆண்டு இந்தியாவை விட பெஞ்சிலும் தரமான வீரர்களை பாகிஸ்தான் கொண்டிருந்ததாக தெரிவிக்கும் அவர் தற்போது அது போன்ற நிலைமை இல்லாததற்கு பாகிஸ்தான் வாரியமே காரணம் என்று விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்தியா வந்தது எனக்கு நினைவில் உள்ளது. அப்போது ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக ஒரு பயிற்சி போட்டியில் அவர்கள் விளையாடினர். அப்போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி இந்தியாவை எளிதாக தோற்கடித்தது. கடாபி மைதானத்தில் ரன் மழை பொழிந்த அந்த போட்டியில் இம்ரான் நசீர் சிறப்பாக ரன்களை குவித்து வெற்றி பெற வைத்தார். ஆனால் தற்போது அதே போன்ற அணியை பயிற்சி எடுக்க உங்களால் உருவாக்க முடியுமா?”

“அந்த சமயத்தில் நானும் பாகிஸ்தான் அணியுடன் இருந்தேன். அப்போதெல்லாம் தென் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடினோம். அதே சமயம் அண்டர்-19 அளவிலும் நிறைய போட்டிகள் நடைபெற்றன. ஆனால் தற்போது அந்த மாதிரியான எந்த போட்டிகளும் நடைபெறுவதில்லை. இதற்காக யாரை குற்றம் சொல்வது? உங்களது புதிய சிஸ்டத்தில் நீங்கள் என்ன கொண்டு வந்துள்ளீர்கள்? என்பது போன்ற நிறைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆனால் இங்கே பதில் கொடுக்க யாருமில்லை” என்று வாயில் மட்டும் பேசும் தற்போதைய பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவை மறைமுகமாக விமர்சித்தார்.

Advertisement