2017 ஃபைனல் மாதிரியே நடக்குதே, அடித்து நொறுக்கிய பாகிஸ்தான், ரசிகர்கள் கவலை – இளம் இந்திய படை சாதிக்குமா?

IND a vs PAk A
- Advertisement -

இலங்கையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடரின் மாபெரும் இறுதி போட்டி ஜூலை 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் வாங்கியது. அதில் லீக் சுற்றில் நேபாளம், அமீரகம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்து செமி ஃபைனலில் வங்கதேசத்தையும் வீழ்த்திய இந்தியா ஏ அணி யாஷ் துள் தலைமையில் களமிறங்கியது. மறுபுறம் இந்தியாவிடம் தோற்றாலும் நேபாளம் மற்றும் அமீரகத்தை வீழ்த்தி செமி ஃபைனலில் சொந்த மண்ணில் இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்கள் சாய்ம் ஆயுப் மற்றும் ஃபர்கான் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். அப்போது ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் வீசிய 4வது ஓவரின் கடைசி மண்ணில் ஆயுப் சிக்ஸர் அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்தார். அதை விக்கெட் கீப்பர் சரியாக பிடித்த போதிலும் அம்பயர் நோபால் என்று அறிவித்தது மொத்த இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. ஏனெனில் கடந்த 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் இதே போல பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா நோபால் வீசியதால் தப்பிய பக்கார் ஜமான் சதமடித்து இந்தியாவுக்கும் மெகா தோல்வியை பரிசளித்ததை இப்போதும் யாராலும் மறக்க முடியவில்லை.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:
அதை ஜூனியர் அளவிலும் அரங்கேற்றிய இந்தியாவை தொடர்ந்து வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமான துவக்கத்தை கொடுத்த போது மாணவ் சுதர் சுழலில் சாய்ம் ஆயுப் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 59 (51) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் 4 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட ஃபர்கான் 65 (62) ரன்கள் ரன் அவுட்டானார். அந்த நிலைமையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய ஓமர் யூசப்பை 35 (35) ரன்களில் அவுட்டாக்கிய ரியன் பராக் அடுத்ததாக வந்த காசிம் அக்ரமையும் டக் அவுட்டாக்கி போட்டியை இந்தியாவின் பக்கம் இழுத்தார்.

அத்துடன் அடுத்ததாக வந்த கேப்டன் முகமது ஹரிஷ் 2 (6) ரன்களில் பெவிலியன் திரும்பியதால் இந்தியாவின் கை ஓங்கினாலும் அடுத்ததாக வந்த டைஜுப் தாஹிர் ஆரம்பத்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிந்த பாகிஸ்தானை தூக்க முயற்சித்தார். குறிப்பாக எதிர்ப்புறம் முபாசிர் கான் கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவாக அரை சதமடித்தார்.

- Advertisement -

நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று 6வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவிய அவர் சதமடித்து 12 பவுண்டரி 4 சிக்சருடன் 108 (71) ரன்கள் குவித்து இந்தியாவை பந்தாடிய ஆட்டமிழந்தார். அவருடன் முபாசிர் கான் 35 (47) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மும்தாஜ் 13 (10) முகமது வாசிம் 17 (10) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் பாகிஸ்தான் ஏ 352/8 ரன்கள் எடுத்தது.

மறுபுறம் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரியான் பராக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதை பார்க்கும் போதும் 2017 சாம்பியன்ஸ் டிராபி 350க்கும் மேற்பட்ட இலக்கை துரத்தும் போது விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய டாப் ஆர்டர் சொதப்பியதும் கடைசியில் ஹர்திக் பாண்டியா போராடி தோல்வியை சந்தித்ததுமே இந்திய ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது.

ஏனெனில் ஜூனியர் உட்பட எந்த வகையான தொடரிலும் மாபெரும் அழுத்தம் மிகுந்த ஃபைனலில் 250 ரன்களை சேசிங் செய்வதே கடினம் என்ற நிலைமையில் இப்போட்டியில் 353 என்ற பெரிய இலக்கை துரத்த வேண்டிய நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இதே பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் சதமடித்த தமிழகத்தின் சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா, யாஷ் துள் போன்ற நிறைய தரமான இளம் வீரர்களை கொண்டுள்ள இந்தியா ஏ அதை சேசிங் செய்து தாய் மண்ணுக்கு பெருமை சேர்க்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement