பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவில்பிண்டி நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானை ஆரம்பம் முதலே கட்டுகோப்பாக பந்து வீசி மடக்கிய வங்கதேசம் 274 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 57, சாய்ம் ஆயுப் 58, ஆகா சல்மான் 54 ரன்கள் எடுத்தனர் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 5, டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் களமிறங்கிய வங்கதேசத்திற்கு கேப்டன் சாண்டோ, முஸ்பிகர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் கிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அரிதான சாதனை:
அதனால் 26-6 என சரிந்த வங்கதேசம் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது நங்கூரமாக விளையாடிய லிட்டன் தாஸ் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்தை தூக்கினார். அதில் லிட்டன் தாஸ் சதமடித்து 138, மெகதி ஹசன் 78 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குர்ராம் ஷெஷாத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் முதல் போட்டியில் தோற்றதால் பெரிய ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் வங்கதேச பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத அந்த அணி வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43, ஆகா சல்மான் 47* ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5, நஹிட் ராணா 4, தஸ்கின் அஹ்மத் 1 விக்கெட்டுகளை எடுத்தனர். சொல்லப்போனால் அந்த 3 வேகப்பந்து வீச்சாளர்களும் சேர்ந்து பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே எடுத்து வங்கதேசம் அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மழை காப்பாற்றுமா:
இதற்கு முன் இந்தியா போன்ற மற்ற அணிகள் ஏற்கனவே அதை செய்துள்ளன. ஆனால் வங்கதேசம் அந்த அரிதான சாதனையை செய்வது இதுவே முதல் முறையாகும். இறுதியில் 185 ரன்களை துரத்தும் வங்கதேசத்துக்கு ஜாகிர் ஹாசன் 31*, சத்மன் இஸ்லாம் 9* ரன்கள் எடுத்துள்ளனர். அதனால் வங்கதேசம் 42-0 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற போது மழை வந்து ஆட்டத்தை நிறுத்தியது.
இதையும் படிங்க: பேட்டிங் செய்ய களமிறங்கும் முன் இடது புறமாக வானத்தை பார்ப்பது ஏன்? – தல தோனி அளித்த சுவாரசிய பதில்
தற்போதைய நிலையில் கடைசி நாளில் 10 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருக்கும் வங்கதேசத்தின் வெற்றிக்கு 143 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசத்திடம் ஒயிட்வாஸ் அவமான சாதனைத் தோல்வியை தவிர்க்க கடைசி நாளில் பாகிஸ்தான் பந்து வீச்சில் மேஜிக் செய்ய வேண்டும் அல்லது மழை வந்து காப்பாற்ற வேண்டும்.



