ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. நடப்புச் சாம்பியன் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்தார்.
அந்த நிலையில் துவங்கிய அப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சாய்ம் ஆயுப் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த முகமது ஹாரிஸையும் 3 ரன்னில் அவுட்டாக்கிய பும்ரா ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை தெறிக்க விட்டார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஃபர்கான் நிதானமாக விளையாடினார்.
இந்தியா அசத்தல்:
ஆனால் இந்தப் பக்கம் வந்த ஃபகார் ஜமானை 3 ரன்களில் அவுட்டாக்கிய அக்சர் படேல் அடுத்து வந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவையும் 3 ரன்னில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அடுத்த ஓவரில் ஹசன் நவாஸ் 5, முகமது நவாஸ் 0 ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டாகி பாகிஸ்தானுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 64/5 என ஆரம்பத்திலேயே திண்டாடிய பாகிஸ்தான் 100 ரன்கள் தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த ஃபர்ஹானும் 40 (44) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். அடுத்து வந்த ஃபஹீம் அஸ்ரப் 11, சுபியன் முஹீம் 10 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள்.
இந்தியா அசத்துமா:
இருப்பினும் டெயில் எண்டர் சாகின் அப்ரிடி கடைசி நேரத்தில் பேட்டிங்கில் 4 சிக்சர்களை பறக்க விட்டு 33* (16) ரன்கள் விளாசி ஓரளவு பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றினார். அவருடைய அதிரடியால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவரில் 127/9 ரன்கள் எடுத்தது. இல்லையெனில் பாகிஸ்தானும் 100 ரன்களுக்குள் ஆள் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய அவமானத்தை சந்தித்திருக்கும் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: எந்த மாற்றமும் இல்லை.. பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்த படை போதும்.. டாஸிற்கு பிறகு – கேப்டன் ஹேப்பி
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியிலும் வென்றால் இந்தியா கடைசி இரண்டு போட்டிக்கு முன்பாகவே சூப்பர் நான்கு சுற்றுக்கு தகுதி பெறும் என்று சொல்லலாம். ஏனெனில் இந்தியாவின் ரன் ரேட் மற்ற அனைத்து அணிகளை காட்டிலும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



