
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாவே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அத்தொடரில் நவம்பர் 22ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்ற 3வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவரில் போராடி 128/7 ரன்கள் எடுத்தது. இலங்கைக்கு நிசாங்கா 17, குசால் மெண்டிஸ் 3, கேப்டன் சனாக்கா 0, கமிண்டு மெண்டிஸ் 3, ஹஸரங்கா 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக ஜனித் லியனகே 41*, குசால் பெரேரா 25, கமில் மிஸ்ரா 22 ரன்கள் எடுத்தார்கள்.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக 129 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சகிப்ஸ்டா ஃபர்ஹான் இலங்கை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். எதிர்ப்புறம் தடுமாற்றமாக விளையாடிய சாய்ம் ஆயுப் 20 (18) ரன்களில் சனாக்கா வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தானின் சூப்பர்ஸ்டார் பாபர் அசாம் மிகவும் திண்டாட்டமாக பேட்டிங் செய்தார். ஒரே ஒரு சிக்ஸருக்கு மேல் அதிரடியாக விளையாடத் திண்டாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை போல மிகவும் மெதுவாக விளையாடி 16 (22) ரன்னில் சமீரா வேகத்தில் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் சல்மான் ஆகா முதல் பந்திலேயே சமீரா வேகத்தில் கோல்டன் டக் அவுட்டானார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ஃபர்கான் அரை சதத்தை அடித்து தம்முடைய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாத அவர் 6 பவுண்டரில் 5 சிக்ஸருடன் 80* (45) ரன்கள் அடித்து போட்டியை முடித்தார். அவருடன் உஸ்மான் கான் 5* (7) ரன்கள் எடுத்ததால் 13.3 ஓவரிலேயே 131/3 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று இத்தொடரில் 2வது வெற்றியைப் பெற்றது.
இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு – என்ன காரணம்?
இப்போட்டியின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிகப்பட்ச ஸ்கோர் அடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஃபர்கான் படைத்துள்ளார். இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக சோயப் மாலிக் 57 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற நிக்கோலஸ் பூரான் மற்றும் கரண்பீர் சிங் ஆகியோரின் சாதனையையும் அவர் (மூவரும் தலா 15 முறை) சமன் செய்துள்ளார்.