66க்கு அவுட்.. ஃபைனலில் மோசமான உலக சாதனை படைத்த ஆப்கானை சாய்த்த பாகிஸ்தான்.. நவாஸ் ஹாட்ரிக் சாதனை

AFG vs PAK
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்குகிறது. அத்தொடருக்கு முன் ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடின. அத்தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றன. அப்போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவரில் போராடி 141/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பகார் ஜமான் 27, கேப்டன் சல்மான் ஆகா 24, முகமது நவாஸ் 25 ரன்கள் எடுத்தார்கள். ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரசீத் கான் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஹாட்ரிக் மாயாஜாலம்:

அடுத்ததாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் ரகமனுல்லா குர்பாஸ் 5, செதிகுல்லா அடல் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அடுத்ததாக வந்த ரசூலி, ஓமர்சாய் ஆகியோர் முகமது நவாஸ் வீசிய 6வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள். அதோடு நிற்காத நவாஸ் 7வது ஓவரின் முதல் பந்தில் இப்ராஹிம் ஜாட்ரானை 9 ரன்களில் அவுட்டாக்கினார்.

அந்த வகையில் 5.6, 5.6, 7.1 ஆகிய அடுத்தடுத்த 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்த நவாஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த 3வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த முகமது நபி 3, கரீம் ஜானத் 0, கேப்டன் ரஷீத் கான் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இறுதியில் 15.5 ஓவரில் ஆப்கானிஸ்தானை 66 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் மோசம்:

அதனால் இந்த முத்தரப்பு தொடரின் கோப்பையை வென்ற பாகிஸ்தான் 2025 ஆசியக் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை காண்பித்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹாட்ரிக் உட்பட 4 ஓவரில் 5 விக்கெட்டுகள் எடுத்த முகமது நவாஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 தொடரின் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் (5/19) எடுத்த வீரர் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் 2019 ஃபசிபிக் தொடரின் இறுதிப்போட்டியில் வனுவாட்டு அணிக்கு எதிராக பப்புவா நியூ கினியாவின் நோர்மன் வனுவா 5 விக்கெட்டுகள் (5/17) எடுத்துள்ளார். மறுபுறம் ஒரு சர்வதேச டி20 தொடரின் இறுதிப் போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் அவர் கண்டிப்பா ஆடியிருக்கனும்.. 27 வயது இந்திய வீரருக்கு ஆதரவாக பேசிய – கிரிஸ் கெயில்

இதற்கு முன் 2024 ஐரோப்பா துணை மண்டல தகுதி சுற்று பி இறுதிப்போட்டியில் ஜெர்சிக்கு எதிராக நார்வே அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை. இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் தங்களுடைய 2வது குறைந்தபட்ச டி20 ஸ்கோரையும் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement