இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டி பரபரப்பாக நடைபெற்று டிராவில் முடிந்தது. இருப்பினும் அத்தொடரில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தயாராகி வருகிறது.
அந்தப் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கே இன்று இந்திய அணியினர் வழக்கம் போல பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் மைதானப் பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் ஆகியோருக்கிடையே சண்டை ஏற்பட்டது. அதைத் தவிர்ப்பதற்காக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் அவரை சற்று தொலைவாக அழைத்துச் சென்றார்.
கம்பீர் யார்ன்னே தெரியாது:
அதையும் தாண்டி அவருடைய அருகே சென்ற கௌதம் கம்பீர் கையை நீட்டி காரசாரமாக பேசினார். அந்த நிலையில் இந்திய உதவி பயிற்சியாளர்களிடம் போர்ட்டிஸ் கோபமாக பேசியதாலேயே கம்பீரும் கோபப்பட்டதாக கோட்டக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் பிட்ச்சை 2.5 மீட்டர் தொலைவிலிருந்தே பார்க்க வேண்டுமென இந்திய அணியினருக்கு போர்ட்டிஸ் நிபந்தனை விதித்ததாகவும் கோட்டக் கூறினார்.
இத்தனைக்கும் இந்திய அணியினர் யாரும் ஆணியுடன் கூடிய காலணியை அணியாத போதிலும், மைதானப் பராமரிப்பாளர் அப்படி சொன்னதாலேயே கம்பீர் கோபப்பட்டதாகவும் கோட்டாக தெரிவித்தார். இந்நிலையில் அந்த சண்டை பற்றி கேட்டதற்கு கௌதம் கம்பீர் தமக்கு யார் என்று தெரியாது என லீ போர்ட்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் சண்டைக்கான காரணத்தை தெரிவிக்காத அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
கியூரேட்டர் பதில்:
“அடுத்ததாக பெரிய போட்டி நடைபெற உள்ளது. அவர் (கம்பீர்) கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர். இருப்பினும் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த மைதானத்தில் ஒரு பெரிய போட்டி வரப்போகிறது அல்லவா? அவருடன் (கம்பீர்) மகிழ்ச்சியாக இருப்பது அல்லது இல்லாதிருப்பது என்னுடைய வேலை அல்ல. அவரைப் பற்றி எனக்குத் தெரியாது, இதற்கு முன் அவரை நான் சந்தித்ததில்லை”
இதையும் படிங்க: 2.5 மீட்டர் கண்டிஷன் போட்டாரு.. ஓவல் கியூரேட்டருடன் கம்பீர் சண்டையிடக் காரணம் என்ன? கோட்டக் பேட்டி
“அவருடைய கோபத்துக்கான காரணம் எனக்குத் தெரியாது. அவர் இங்கே விளையாடியிருக்க வேண்டும். இன்று காலை அவர் எப்படி வந்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். நடந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாக்குவாதம் செய்ததற்கான காரணம் பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார். மொத்தத்தில் கடைசி போட்டிக்கு முன் இவர்களுடைய சண்டை புதிய சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



