எதிரணியினர் அவரை ஒரு பவுலராகவே மதிக்க மாட்டாங்க – இளம் இந்திய வீரரை பற்றி முன்னாள் பாக் வீரர் உதாசீன கருத்து

Arshdeep-Singh
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. இத்தனைக்கும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி இருந்தும் தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடிகளால் இந்த தோல்வியை இந்தியா சந்தித்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. முன்னதாக அந்த தொடரில் முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 18வது ஓவரில் ஆசிப் அலி கொடுத்த அழகான கேட்ச்சை இளம் இந்திய வீரர் அரஷ்தீப் சிங் கோட்டை விட்டது தோல்வியை பரிசளித்தது.

Rohit Sharma Arshdeep Singh

- Advertisement -

அத்துடன் 19வது ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஸ்வர் குமார் 19 ரன்களை வாரி வழங்கியது, தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்ட ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங் போன்ற அம்சங்களும் தோல்வியை பரிசளித்தது. ஆனால் அந்த ஒற்றை கேட்ச் மட்டுமே தோல்விக்கு காரணமாக அமைந்தது போல் பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அரஷ்தீப் சிங்கை வழக்கம் போல விமர்சித்தும் எல்லை மீறி கடும் சொற்களை உபயோகித்தும் திட்டி தீர்த்தார்கள்.

திறமையான அர்ஷிதீப்:
ஆனால் அதே போட்டியில் கடைசி ஓவரில் வெறும் 7 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் முடிந்த வரை போராடிய அவர் போட்டியை 5வது பந்து வரை போட்டியை இழுத்து வந்தார். அந்தளவுக்கு திறமை வாய்ந்த அவர் கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு சிறப்பாக பந்து வீசி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

Arshdeep Singh

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் ரன்களை அடிக்க துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் திறமை பெற்றுள்ள அவர் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி இதுவரை 11 டி20 போட்டிகளில் 14 விக்கெட்களை 7.38 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிலும் தனித்துவமான இடது கை வேகப்பந்து வீச்சாளராக வெறும் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த போதிலும் நேரடியாக உலகக்கோப்பைக்கு தேர்வாகும் அளவுக்கு இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

மதிக்கவே மாட்டாங்க:
குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறடிக்கும் அளவுக்கு விவேகத்துடன் பந்து வீசும் இவர் அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்நிலையில் அர்ஷிதீப் சிங் போன்ற பவுலரை எதிரணியினர் மதிப்பதற்காக கூட நினைத்து பார்க்க மாட்டார்கள் என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் அவர் ஒரு சாதாரண பவுலர் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் வெறும் சாதாரண பவுலர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் ஒன்று புவனேஸ்வர் குமார் போல ஸ்விங் அல்லது வேகத்தை கொண்டிருக்க வேண்டும். அல்லது பவுன்சர்களை வீசுவதற்காக நீங்கள் உயரமானவராக இருக்க வேண்டும்”

Aakib Javed

“மேலும் உங்களுக்கென்று நீங்கள் டிரேட் மார்க்கை உருவாக்க வேண்டும். உலக அளவில் உள்ள பவுலர்களிடம் நீங்கள் அதை பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக பும்ரா கச்சிதமான யார்கர் பந்துகளை வீசுவார். ஹர்டிக் பாண்டியாவின் பவுன்சர்கள் அச்சுறுத்தும் வகையில் இருக்கும். ஷாஹீன் அப்ரிடியிடம் ஸ்விங் உள்ளது. ஹாரீஷிடம் வேகம் உள்ளது. எனவே அர்ஷிதீப் சிங் வேறொரு பவுலரைப் போல் இருக்க முயற்சிக்க வேண்டும். அவரிடம் எந்த ட்ரேட் மார்க்கும் இல்லை. சொல்லப்போனால் எதிரணியினர் அவரைப் போன்ற பவுலரை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்” என்று கூறினார்.

அதாவது பும்ரா, பாண்டியா, ஷாஹீன் போன்ற பவுலர்கள் கொண்டிருக்கும் வேகம், பவுன்ஸ், ஸ்விங் போன்ற அம்சங்களில் எதையுமே கொண்டிருக்காத அர்ஷிதீப் சிங்கை நினைத்து எதிரணியினர் பயப்பட மாட்டார்கள் எனக்கூறும் ஆகிப் ஜாவேத் மற்றவர்களைப் போல் அல்லாமல் அவர் தனக்கென்று ஏதேனும் ட்ரேட் மார்க்கை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் வெறும் 23 வயதில் ஆரம்ப காலங்களில் மட்டுமே இருக்கும் அர்ஷிதீப் சிங்கை பாராட்டவில்லை என்றாலும் உதாசீனப்படுத்தும் வகையில் பேசும் இவருடைய கருத்து நிறைய இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைக்கிறது.

Advertisement