எல்லாம் ஆர்சிபி செயல், பெங்களூருவுக்கு நன்றி சொல்லும் குஜராத் ரசிகர்கள் – காரணம் இதோ

Gary Kristen Ashish Nehra
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் 2008 முதல் இப்போது வரை முதல் கோப்பையை வெல்ல முடியாத அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன்மையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அனில் கும்ப்ளே, டேனியல், வெட்டோரி, விராட் கோலி தலைமையில் ஏபி டிவில்லியர்ஸ் கிறிஸ் கெயில் போன்ற தரமான நட்சத்திர வீரர்கள் விளையாடிய போதிலும் ஒவ்வொரு வருடத்திலும் சிறப்பாக செயல்படும் அந்த அணி ஏதோ ஒரு முக்கியமான தருணத்தில் சொதப்பி கையில் இருக்கும் நல்ல வெற்றியைக் கூட எதிரணிக்கு பரிசளித்து வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அதே பெங்களூரு அணி 49க்கு ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்துள்ளதே அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

மேலும் மும்பை, சென்னை போன்ற அணிகளில் ஒருசில தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக அதில் சுமாராக செயல்பட்ட வீரர்களை அடிக்கடி மாற்றுவதில்லை. ஆனால் ஒருசில தோல்விகள் அடைந்தாலே அதற்கு காரணமான வீரர்களுக்கு வாய்ப்பையும் ஆதரவையும் அளிக்காமல் உடனடியாக அவர்களை நீக்கக் கூடிய ஒரு அணியாகவே பெங்களூரு வரலாற்றில் இருந்து வருகிறது.

- Advertisement -

சாம்பியன் ஆர்சிபி வீரர்கள்:
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் மெஷின்கள் அல்ல என்பதன் அடிப்படையில் ஒருசில போட்டிகளில் சொதப்புவது சகஜமானது. அதனால் அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பையும் ஆதரவையும் அளித்தால் பெரிய அளவில் வெற்றிகளை பரிசாக தருவார்கள். ஆனால் ஒருசில தோல்விகளில் சொதப்பும் வீரர்களை 11 பேர் அணியில் இருந்து அதிரடியாக நீக்குவதோடு நிற்காத பெங்களூரு அணி நிர்வாகம் அந்த வருடத்தின் இறுதியில் மொத்தமாக கழற்றி விட்டுவிடும். ஆனால் அதே வீரர்கள் நாளடைவில் இதர அணிகளுக்கு போய் அங்கு கிடைக்கும் ஆதரவால் அட்டகாசமாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்ததை வரலாற்றில் பல முறை பார்த்துள்ளோம்.

எடுத்துக்காட்டாக பெங்களூரு அணியில் 2016இல் சொதப்பியதால் கழற்றிவிடப்பட்ட அதே ஷேன் வாட்சன் 2018இல் அபாரமாக செயல்பட்டு அதே ஹைதராபாத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதமடித்து சென்னை எளிதாக 3-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதேபோல் அந்த அணி கழற்றிவிட்ட மொய்ன் அலி கடந்த சில வருடங்களாக சென்னையில் நம்பிக்கை நட்சத்திர ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார். ஏன் 2013 – 2021 மிகச் சிறப்பாக செயல்பட்ட யுஸ்வென்ற சஹாலை இந்த வருடம் பெங்களூரு அணி நிர்வாகம் கழற்றி விட்ட நிலையில் ராஜஸ்தானுக்காக 27 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஊதா தொப்பியை வென்று அந்த அணியின் முடிவை தவறு என நிரூபித்துள்ளார்.

- Advertisement -

நெஹ்ரா – க்ரிஸ்டன்:
அதனால் பெங்களூரு அணியில் விளையாடும் வீரர்கள் வெளியில் போனால் மிகச் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் வீரர்களாக மாறுவார்கள் என்ற கருத்து ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனால் அந்த அணி நிர்வாகம் கழற்றிவிட்ட பயிற்சியாளர்கள் சாம்பியனாக மாறுவது தற்போது புதிய ட்ரெண்ட்டாக உருவாகியுள்ளது. ஆம் 2018, 2019 ஆகிய சீசன்களில் இந்தியாவிற்காக 2011 உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் மற்றும் நட்சத்திர முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹரா ஆகியோர் பெங்களூரு அணியின் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

இருப்பினும் அந்த வருடங்களில் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத காரணத்தால் 2020இல் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். அத்துடன் இவரெல்லாம் பயிற்சியாளராக இருப்பதற்க்கு எந்த தகுதியும் கிடையாது என்று ஆசிஸ் நெஹ்ராவை அந்த சமயங்களில் கிடைத்த தோல்விகளால் ஆர்சிபி ரசிகர்கள் சரமாரியாக சமூக வலைதளங்களில் கலாய்த்து விமர்சித்தனர்.

சாம்பியன் கோச்:
அந்த நிலைமையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத்துக்கு ஆசிஸ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராகவும் கேரி கிறிஸ்டன் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டனர். அவர்களின் பிரமாதமான பயிற்சியில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் ரஷித் கான், டேவிட் மில்லர் போன்ற முக்கிய வீரர்கள் அனைத்துப் போட்டிகளிலும் தேவையான அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டதால் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இதிலிருந்து அன்று கிண்டலடித்த ஆர்சிபி ரசிகர்களுக்கு தாமும் ஒரு சிறந்த பயிற்சியாளர் என்பதை ஆஷிஷ் நெஹ்ரா இன்று கோப்பையை வென்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முன்பெல்லாம் பெங்களூரு கழற்றிவிட்ட வீரர்கள் தான் வெளியே போய் சாம்பியன் பட்டம் பெற்றுக் கொடுப்பார்கள் ஆனால் தற்போதெல்லாம் அவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய பயிற்சியாளர்களும் வெளியே போய் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இன்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். மேலும் இப்படி தரமான பயிற்சியாளர்களை தங்களுக்கு கொடுத்ததற்காக பெங்களூருவுக்கு குஜராத் ரசிகர்கள் நன்றியும் தெரிவிக்கின்றனர்.

Advertisement