ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி பரபரப்பான தருணங்களை விருந்து படைத்து வரும் 2022 டி20 உலக கோப்பை வரலாற்றின் 8வது சாம்பியனை அடையாளப் படுத்துவதற்காக நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. பொதுவாக டி20 கிரிக்கெட் என்றாலே அதிரடியாக அதிவேகமாக துடிப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும். அப்படி பயமறியாத காளைகளாக துடிப்புடன் செயல்படுவதற்கு இளமையான வயதும் நல்ல உடல் தகுதியும் அவசியமாகிறது. அதனாலேயே பெரும்பாலான அணிகள் இளம் வீரர்களை டி20 கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்வது வழக்கமாகும்.

ஆனால் வேகத்தை விட விவேகமும் அனுபவமே சிறந்த ஆசான் என்பதை நிரூபிக்கும் வகையில் சில வீரர்கள் ஏராளமாக விளையாடி பெற்ற அனுபவத்தை வைத்து களத்தில் கச்சிதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார்கள். அது போன்ற வீரர்கள் வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தவிர்க்க முடியாதவர்களாக அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி இதர வீரர்களுக்கும் அனுபவத்தை பகிரும் கலங்கரை விளக்கமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த உலக கோப்பையில் டாப் 10 அணிகளில் விளையாடும் மூத்த வீரர்களை பற்றி பார்ப்போம்:
10. முகமது நபி: சர்வதேச கிரிக்கெட்டில் சமீப காலங்களில் ஆப்கானிஸ்தானின் எழுச்சிக்கு முக்கிய தூணாக கருதப்படும் இவர் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக வெற்றியில் முக்கிய பங்காற்றக் கூடிய வீரராக திகழ்கிறார். தற்போது 37 வயது 291 நாட்களாகும் இவர் அந்த அணியை அனுபவம் வாய்ந்த கேப்டனாக முன்னின்று வழி நடத்துகிறார்.

9. மார்ட்டின் கப்டில்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரராக சாதனை படைத்து வரும் இவர் 36 வருடம் 19 நாட்களை கடந்து அந்த அணியின் சீனியர் வீரராக இத்தொடரில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் அந்த அணியில் இருக்கும் இதர வீரர்களைக் காட்டிலும் இவர் 7வது டி20 உலக கோப்பையில் விளையாடுகிறார்.
8. டேவிட் வார்னர்: அதிரடி தொடக்க வீரரான இவர் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

ஏற்கனவே 35 வருடம் 357 நாட்கள் வயதை கடந்துள்ள இவர் ஆஸ்திரேலிய அணியில் இதர வீரர்களைக் காட்டிலும் அனுபவம் வாய்ந்த வீரராக இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க களமிறங்குகிறார்.
7. மொயின் அலி: 35 வருடம் 123 நாட்கள் வயதை கடந்து விட்டார் என்பதை ஆட்டத்தில் எப்போதும் பிரதிபலிக்காத வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்யக்கூடிய இவர் இங்கிலாந்து அணியில் இதர வீரர்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்த வீரராக இந்த உலக கோப்பையில் களமிறங்குகிறார்.

6. ஷகிப் அல் ஹசன்: 2007இல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையிலும் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையிலும் விளையாடும் ஒரே வங்கதேச வீரராக சாதனை படைத்துள்ள இவர் அந்த அணியின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். தற்போது 35 வருடம் 209 நாட்களை கடந்துள்ள அவர் வங்கதேச அணியின் அனுபவம் அந்த சீனியர் வீரராகவும் கேப்டனாகவும் இத்தொடரில் களமிறங்குகிறார்.
5. டேவிட் மில்லர்: 33 வருடம் 131 நாட்கள் வயதானவர் என்று நம்ப முடியாத அளவுக்கு இளம் வீரரை போல் சொல்லி அடிக்கும் திறமை பெற்றுள்ள இவர் தென்னாபிரிக்க அணியின் மூத்த வீரராகவும் நல்ல பார்மில் முரட்டுத்தனமாக அடிக்கும் பேட்ஸ்மேனாகவும் இந்த தொடரில் களமிறங்குகிறார்.

4. சமர் ப்ரூக்ஸ்: கடைசி நேரத்தில் நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மையர் விமானத்தை தவற விட்டதால் அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு பெற்ற இவர் 34 வருடம் 17 நாட்களை கடந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரராக இத்தொடரில் விளையாடுகிறார்.
3. ஜெப்ரி வேண்டர்செய்: இளம் வீரர்களை வைத்து சமீபத்திய ஆசிய கோப்பையில் வென்று சாதனை படைத்த இலங்கை அணியின் மூத்த வீரராக 32 வருடம் 256 நாட்கள் வயதாகும் இவர் சுழல் பந்து வீச்சாளராக விளையாடுகிறார்.

2.ஷான் மசூட்: பாபர் அசாம் போன்ற நட்சத்திர மற்றும் இளம் வீரர்களுக்கு மத்தியில் 33 வருடம் 4 நாட்கள் வயதை கடந்துள்ள இவர் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக இத்தொடரில் விளையாடுகிறார்.
1. தினேஷ் கார்த்திக்: 37 வருடம் 138 நாட்கள் வயதாகும் இவர் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்பட்டதால் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தாலும் தம்மால் உலக கோப்பையில் விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் உழைத்து 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து லட்சிய பயணத்தில் வெற்றி கண்டுள்ளார். ஆனால் இளம் வீரரைப் போல அசத்தும் இவர் 37 வயதுக்குப் பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராகவும் பினிஷராகவும் இத்தொடரில் களமிறங்குகிறார்.



