IND vs RSA : தோல்வியிலும் இந்திய அணிக்கு கிடைத்த மெகா ஆதரவு – தெ.ஆப்பிரிக்காவை சாய்க்குமா?

RIshabh Pant Fans
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அட்டகாசமான தொடக்கத்தை பெற்றுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் மிரட்டலாக பேட்டிங் செய்த இந்தியா வெற்றி இலக்காக 212 ரன்கள் குவித்தது. அதை துரத்திய தென்னாப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 81/3 என்ற நிலைமையில் தடுமாறியதால் இந்தியாவின் வெற்றியும் உறுதியானது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் ஜோடி சேர்ந்த டுஷன் – மில்லர் ஜோடி ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் ஆகிய தரமான பவுலர்களையும் சரமாரியாக அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டலான தோல்வியை பரிசளித்தனர்.

கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில் ரிஷப் பண்ட் சுமாராக கேப்டன்ஷிப் செய்ததையும் இந்திய பவுலர்கள் கடைசி நேரத்தில் சொதப்பியதையும் பயன்படுத்திய தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியை பரிசளித்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதைவிட கடந்த 2021 ஐசிசி டி20 உலக கோப்பையில் துவங்கி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என கடைசியாக பங்கேற்ற 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று உலக சாதனை படைத்து வந்த இந்தியாவை சொந்த மண்ணில் தடுத்து நிறுத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

- Advertisement -

2-வது டி20:
அத்துடன் சொந்த மண்ணாக இருந்தாலும் எஞ்சிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை நினைத்து பார்க்க முடியும் என்ற மிகப்பெரிய சவாலையும் முதல் போட்டியின் வாயிலாக தென்னாப்பிரிக்கா காண்பித்துள்ளது. எனவே தரமான வீரர்கள் நிறைந்திருந்த போதிலும் அடுத்து வரும் போட்டிகளில் சொந்த மண்ணில் மேற்கொண்டும் தோல்வியடைந்தால் அது உண்மையாகவே இந்திய அணிக்கு அவமானமாகும். அதன் காரணமாக ஜூன் 12இல் நடைபெறும் இத்தொடரின் 2-வது போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் இரு மடங்காக போராட உள்ளனர்.

அதற்காக அந்த போட்டி நடைபெறும் ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் உள்ள கட்டாக் நகரை சென்றடைந்த அவர்களுக்கு அம்மாநில கிரிக்கெட் வாரியம் சார்பில் நேற்று முன்தினம் பாரம்பரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2-வது போட்டியில் வென்று பதிலடி கொடுப்பதற்காக ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியினர் அங்குள்ள ப்ராபதி கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

மெகா ஆதரவு:
அந்த நிலைமையில் நேற்று 2-வது நாளாக இந்திய அணியினர் பயிற்சியை தொடர்ந்த போது இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கி இந்திய வீரர்களை பார்க்க வந்த ரசிகர்களுக்கு வலைப்பயிற்சி செய்வதை பார்க்க கட்டணமின்றி இலவசமாக மைதான நிர்வாகம் அனுமதித்தது. அதனால் சாதாரண பயிற்சியை பார்ப்பதற்காக சுமார் 5000 – 10000 ரசிகர்கள் ஒன்றுகூடி கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற இந்திய வீரர்கள் பெரிய ஷாட்கள் அடிக்கும்போது விண்ணதிர முழங்கி வலைப்பயிற்சிக்கே மெகா ஆதரவு கொடுத்தனர்.

இதற்கு முக்கிய காரணமும் உள்ளது. ஏனெனில் கடைசியாக இந்த மைதானத்தில் கடந்த 2019இல் இந்தியா பங்கேற்ற ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதன் பின் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு எந்த சர்வதேச போட்டியும் நடைபெறாத காரணத்தாலேயே இந்திய வீரர்களை பார்ப்பதற்கு ஒடிசா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வலை பயிற்சியாக இருந்தாலும் நேராக வந்து ஆதரவு கொடுத்தனர். இதற்கே இப்படி என்றால் போட்டி நடைபெறும் போது எவ்வளவு ரசிகர்கள் எவ்வளவு ஆதரவு கொடுப்பார்கள் என்று நினைத்து பார்த்தாலே புல்லரிக்கும் வகையில் உள்ளது.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:
இந்தியாவில் கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டு என்பதையும் தாண்டி ஒரு மதமாக உள்ளது என்று வல்லுநர்கள் கூறுவார்கள். அதை கிரிக்கெட்டை ஆழமாக நேசிக்கும் ஒடிசா ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்கள். மேலும் வரும் காலங்களில் ஒடிசாவில் இந்தியா விளையாடும் போட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மொத்தத்தில் சாதாரண வலை பயிற்சிக்கே இவ்வளவு பெரிய அன்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ள ஒடிசா ரசிகர்களுக்காக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் முழுமையான பலத்தை காட்டி பழி வாங்கி தோற்கடித்து தொடரை சமன் செய்யுங்கள் என்று அனைத்து இந்திய ரசிகர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க : 2011 உலககோப்பை செமி பைனலில் மட்டும் நான் விளையாடி இருந்தா – சோயப் அக்தர் பேச்சு

அதற்காக களத்தில் கச்சிதமாக செயல்பட்டு வெற்றிக் கொடியை பறக்க விட்டு ஒடிசா ரசிகர்களுக்கு இந்திய அணியினர் மகிழ்ச்சியை கொடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement