திடீரென அழிய துவங்கும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பேசாமல் முழுக்கு போட்டு விடலாம் – பாக் ஜாம்பவான் கருத்து

India
- Advertisement -

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவான கிரிக்கெட் ஆரம்ப காலங்களில் எண்ணற்ற நாட்களை கொண்ட போட்டிகளாக துவங்கியது. வாரக்கணக்கில் நடந்த அந்த போட்டிகள் முடிவுகளை கொடுக்காமல் நடந்து கொண்டே இருந்ததால் அதைச் சீர்ப்படுத்த 5 நாட்கள் கொண்ட போட்டிகளாக டெஸ்ட் எனும் பெயருடன் வடிவமைக்கப்பட்டு 20-ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமடைந்தது. இருப்பினும் 5 நாட்கள் கடந்தாலும் முடிவுகளை கொடுக்காமல் பெரும்பாலும் டிராவில் முடிந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக 60 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டிகள் உருவாக்கப்பட்டு நாளடைவில் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதோடு அந்த வகையான போட்டிகளை மையப்படுத்தி உலகச் சாம்பியனை தீர்மானிக்கும் உலக கோப்பையும் அறிமுகப்படுத்தப் பட்டதால் 90களில் ஒருநாள் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பார்க்கும் போட்டிகளாக மாறியது.

2007 t20 worldcup

- Advertisement -

அதன்பின் ஒருநாள் அமர்ந்து பார்க்க முடியாத ரசிகர்களுக்காக 2005இல் உருவாக்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் எதிர்பாராத அளவுக்கு அனல் பறக்கும் தருணங்களை விருந்தாக்கி திரில்லாக அமைந்ததால் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விட மெகா வெற்றி கண்டது. 3 – 4 மணி நேரங்களில் முடிந்து விடுகிறது என்பதால் அப்போது முதல் பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டாக டி20 போட்டிகள் உருவெடுத்ததால் நாளடைவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் மவுசு குறையத் தொடங்கியது. குறிப்பாக 5 நாட்கள் அமர்ந்து யார் பார்ப்பது என்ற எண்ணத்தை ஏற்படுத்த கூடிய டெஸ்ட் போட்டிகள் அழியத் துவங்கின.

திடீர் சரிவில் ஒன்டே:
ஆனால் டெஸ்ட் போட்டிகள் தான் உண்மையான கிரிக்கெட்டின் உயிர்நாடி என்பதை கருத்தில் கொண்ட ஐசிசி அதை காப்பதற்காக 20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பைகளை போல வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன் என்ற உலக கோப்பையை 2019இல் அறிமுகப்படுத்தியது. அதனால் தரவரிசையில் முதலிடம் பிடித்தால் கோப்பை கிடையாது லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு வந்து வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன் கோப்பை என்ற நிலைமை உருவானது. அதன் காரணமாக ட்ரா செய்யாமல் வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மை அனைத்து அணைகளிலும் ஏற்பட்டதால் சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகள் டி20 போட்டிகளை விட விறுவிறுப்பானதாக மாறி புத்துயிர் பெற்றுள்ளது.

BEN Stokes Jasprit Bumrah IND vs ENG

ஆனால் அதிரடிக்கும் பொறுமைக்கும் இடையே நிற்கும் ஒருநாள் போட்டிகள் கடந்த சில வருடங்களில் திடீரென எதிர்பாராத சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. ஏனெனில் அதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் பரபரப்பாக நடைபெறாமல் எதிர்பார்க்கும் முடிவுகளையே கொடுப்பதால் சுவாரஸ்யம் இல்லாத உணர்வை கொடுக்கிறது. மேலும் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளது அந்த வகையான கிரிக்கெட்டின் தற்போதைய உண்மையான நிலைமையை காட்டுவதாக வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

பேசாம நிறுத்திடலாம்:
இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க டி20 போட்டிகளையும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளையும் வழக்கம் போல நடத்தலாம் ஆனால் மவுசு குறையத் தொடங்கியுள்ள ஒருநாள் கிரிக்கெட்டின் இருதரப்பு தொடர்களை நிறுத்தி விடலாம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற உலகசாதனை படைத்துள்ள அவர் இது பற்றி பேசியுள்ளது பின்வருமாறு. “ஒரு வர்ணனையாளராக டி20 போட்டிகள் வந்தபின் ஒருநாள் போட்டிகள் ஒரு இழுபறியாக எனக்கு தோன்றுகிறது. அப்படியானால் வீரர்களின் இடத்திலிருந்து கற்பனை செய்தால் 50 – 50 ஓவர்கள் போட்டி துவங்குவதற்கு முந்தைய ஆட்டம், மதிய உணவு ஆட்டம், பிந்தைய ஆட்டம் என 3 வகைகளில் விளையாட வேண்டியுள்ளது”

wasimakram

“மறுபுறம் 4 மணி நேரங்களில் முடிந்துவிடும் டி20 போட்டிகள் மிகவும் எளிதானது. மேலும் உலகம் முழுவதிலும் டி20 தொடர்கள் நடைபெறுவதால் பணமும் அதிகமாக கிடைக்கிறது. இதை நவீன கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக நான் பார்க்கிறேன். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் அழியும் நிலையில் உள்ளது. அதில் விளையாடுவது வீரர்களுக்கும் சோர்வை ஏற்படுத்துகிறது. ஒருநாள் முழுக்க நடைபெறுவதால் இப்போதெல்லாம் வீரர்கள் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கிறார்கள். இந்த வகையான கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றுள்ளது சோகமானது என்றாலும் அவரின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்”

- Advertisement -

“ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களுக்குப் பின் பந்துக்கு ஏற்ற ரன்களை அடித்து 40 ஓவர்களில் 200, 220 ரன்களை எடுத்து கடைசி 10 ஓவரில் 100 ரன்கள் அடிப்பது சுவாரசியமற்ற தொழிற்சாலை நிகழ்வாகியுள்ளது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு வீரராக உங்களை சோதிக்கும் போட்டியாகும். எனவே பணத்திற்காக டி20 போட்டிகளில் விளையாடினாலும் வரலாற்றில் நீங்கள் சிறந்த வீரராக தெரிவதற்கு அது உதவி செய்யும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs WI : ஒரு இடத்திற்கு இத்தனை பேரா? என்ன இப்படி டீமை செலக்ட் பண்ணியிருக்கீங்க? – ரசிகர்கள் கேள்வி

இருப்பினும் என்னதான் டி20 மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை வந்தாலும் உலக கோப்பை என்ற பெயரைக் கேட்டதும் 90% ரசிகர்களுக்கு 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட உலக கோப்பையே முதலில் நினைவுக்கு வரும் எனவே அதற்கு ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது அவசியமாகும்.

Advertisement