இங்கிலாந்து 43/4 டூ 280.. போப்புடன் சேர்ந்து தூக்கி நிறுத்திய ஹரி ப்ரூக்.. நியூஸிலாந்தில் உலக சாதனை

Harry Brook
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி டிசம்பர் 6ஆம் தேதி வெலிங்டன் பேசின் ரிசவ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்துக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பென் டக்கெட் 0, ஜாக் கிராவ்லி 17 ரன்களில் மாட் ஹென்றி வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்து வந்த ஜோ ரூட் 3, ஜேக்கப் பேத்தல் 16 ரன்களில் நாதன் ஸ்மித் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.

- Advertisement -

ஹரி ப்ரூக் அபாரம்:

அதனால் 43-4 என ஆரம்பத்திலேயே இங்கிலாந்து தடுமாறிய நிலையில் மிடில் ஆர்டரில் ஹரி புரூக் – ஓலி போப் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினார்கள். அதில் போப் கொஞ்சம் நிதானமாக விளையாடிய நிலையில் ப்ரூக் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அந்த வகையில் அசத்தலாக பேட்டிங் செய்த அந்த ஜோடி நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்து இங்கிலாந்தை மீட்டெடுத்தது.

தொடர்ந்து அசத்திய அந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது ஓலி போப் 66 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ப்ரூக் சதமடித்து 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 123 (115) ரன்களை அதிரடியாக குவித்து பெவிலியன் திரும்பினார். இதையும் சேர்த்து நியூசிலாந்தில் அவர் வெறும் 6 இன்னிங்ஸில் 3 சதங்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

நியூஸிலாந்து திணறல்:

அதன் வாயிலாக நியூசிலாந்துமண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கிரகாம் த்ரோப், அலெக் ஸ்டீவார்ட் உட்பட உலகின் மற்ற 9 வீரர்களும் நியூசிலாந்தில் 3 சதங்கள் அடித்துள்ளார்கள். இறுதியில் இங்கிலாந்தை 280 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க: அவுட் என்று ஒத்துக்கொண்டு வெளியேறிய கே.எல் ராகுலை திரும்ப அழைத்த அம்பயர் – என்ன நடந்தது?

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 17, டேவோன் கான்வே 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 3, டேரில் மிட்சேல் 6 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த கேன் வில்லியம்சனும் 37 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 86-5 என முதல் நாளிலேயே தடுமாறி வரும் நியூசிலாந்து இன்னும் 194 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Advertisement