இப்படி ஒரு சாதனையா! பிறந்த நாளில் சச்சினின் 24 வருட சாதனையை உடைத்த நியூசிலாந்து வீரர் – நடந்தது இதோ

Sachin - Tom Latham
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 1 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மார்ச் 29-ஆம் தேதி தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிந் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து 1 – 0* என ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி இன்று ஏப்ரல் 2 இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு ஹமில்டன் நகரில் தொடங்கியது.

- Advertisement -

மிரட்டிய நெதர்லாந்து:
தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி என முக்கியமான நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியை டாம் லாதம் வழி நடத்துகிறார். இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே துல்லியமாகவும் அதிரடியாகவும் பந்துவீசிய நெதர்லாந்து மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது என்றே கூறலாம்.

ஏனெனில் அந்த அணியின் பவுலர்கள் வீசிய தரமான பந்துவீச்சில் நட்சத்திர வீரர் மார்டின் கப்டில் 6 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த வில் எங் மற்றும் அனுபவ வீரர் ராஸ் டைலர் ஆகியோர் அடுத்தடுத்து தலா 1 ரன்னில் அவுட்டானார்கள். போதாகுறைக்கு மற்றொரு தொடக்க வீரர் ஹென்றி நிகோலஸ் 19 ரன்களிலும் மைக்கேல் ப்ரெஸ்வெல் 1 ரன்னிலும் அவுட்டானதால் 9.4 ஓவர்களில் 32/5 என தடுமாறிய நியூசிலாந்து ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது. இதனால் ஏற்பட்ட சரிவிலிருந்து தனது அணியை மீட்க களமிறங்கிய கேப்டன் டாம் லாதம் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக நின்ற டொக் ப்ரெஸ்வெல் பொறுப்புடன் பேட்டிங் செய்து 51 பந்துகளில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Nedarland

மாஸ் காட்டிய டாம் லாதம்:
மறுபுறம் தொடர்ந்து விளையாடிய கேப்டன் டாம் லாதம் மட்டும் வேறு ஏதோ ஒரு போட்டியில் விளையாடுவதைப் போல நெதர்லாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அவரை அவுட் செய்ய முடியாமல் நெதர்லாந்து திணறிய நிலையில் கடைசி வரை அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர் 123 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட சதம் விளாசி 140* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெயில் எண்டர்களை வைத்துக்கொண்டு அவர் பிரமாதமாக ஆடியதால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த நியூசிலாந்து 264 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய வன் பீக் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

நெதர்லாந்து பவுலர்களே சிறப்பாகப் பந்து வீசினார்கள் என்றால் நியூசிலாந்து பவுலர்கள் தனது சொந்த மண்ணில் கண்டிப்பாக சிறப்பாக பந்து வீசுவார்கள் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தது போலவே முதல் ஓவரில் இருந்தே பட்டையை கிளப்பும் வகையில் பந்துவீசிய நியூசிலாந்து பவுலர்கள் முதல் ஓவரில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்தனர். அவர்களின் துல்லியம் நிறைந்த அதிரடி பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாத நெதர்லாந்து 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 146 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 37 (58) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Tom Latham

டாம் லாதமின் பிறந்தநாள் பரிசு:
இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த நியூசிலாந்து சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஒருநாள் தொடரில் 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று முன்கூட்டியே கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் 140* ரன்கள் விளாசி வெற்றிக்கு மிகமிக முக்கிய பங்காற்றிய டாம் லாதம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதில் ஆச்சரியம் என்னவெனில் அவர் இன்று தனது 30-தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

- Advertisement -

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் பிறந்த நாளின் போது நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படி பொன்னாக கிடைத்த இந்த வாய்ப்பில் ஒரு கேப்டனாக அதுவும் தனது அணி 32/5 என தடுமாறியபோது அற்புதமாக விளையாடி 140* ரன்கள் குவித்து நாட்டுக்காகப் பெருமை சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள டாம் லாதம்’க்கு நிச்சயமாக அவரின் 30-வது பிறந்த நாளில் இதை விட வேறு சிறந்த பரிசு இருக்கமுடியாது என்றே கூறலாம்.

Latham

இத்துடன் தனது பிறந்தநாளில் 140* ரன்கள் விளாசிய அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பிறந்த நாளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்து புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : போன வருடம் அம்பி – இந்த வருடம் அந்நியன்! பட்டைய கிளப்பும் உமேஷ் யாதவ் 2 புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

இதற்கு முன் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்தநாளில் 134 ரன்கள் விளாசி இருந்ததே இதுநாள்வரை சாதனையாக இருந்தது. தற்போது அதை 24 வருடங்கள் கழித்து உடைத்துள்ள லாதம் புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement