NZ vs IRE : அரையிறுதி வாய்ப்பை வெற்றியுடன் உறுதி செய்த நியூசிலாந்து – 2 ஆம் இடம் யாருக்கு? – ஆஸ்திரேலியா கவலைக்கிடம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நவம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற முக்கியமான 37வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த அயர்லாந்தை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது. ஏனெனில் குரூப் 1 புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளுடன் இருப்பதால் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்து 185/6 ரன்கள் குவித்தது. புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் 52 ரன்கள் அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 (18) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் டேவோன் கான்வே 28 (33) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த கிளென் பிலிப்ஸ் 17 (9) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் கேன் வில்லியம்சன் நீண்ட நாட்களுக்கு பின் அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 61 (35) ரன்கள் குவித்து ஜோஸ் லிட்டில் வீசிய 19ஆவது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்துகளில் ஜிம்மி நீசம் மற்றும் மிட்சேல் சேட்னர் ஆகியோரை அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட் செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த ஜோஸ் லிட்டில் அயர்லாந்துக்கு அதிகபட்சமாக அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கவலைக்கிடம்:
அதை தொடர்ந்து 186 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஆண்டி பால்பிரின் 3 சிக்ஸருடன் 30 (25) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே அவருடன் மறுபுறம் அதிரடி காட்டிய பால் ஸ்டெர்லிங் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 (27) ரன்களில் அவுட்டானார். ஆனால் அதை பயன்படுத்தி மிடில் ஓவர்களில் தீயாகப் பந்து வீசிய நியூசிலாந்து அடுத்து வந்த டுக்கர் 13 (14) டெக்டர் 2 (7) கெரத் டிலானி 10 (8) ஜார்ஜ் டாக்ரெல் 23 (15) குர்ட்டிஸ் கேம்பர் 7 (7) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது.

அதனால் 20 ஓவர்களில் 150/9 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து தன்னுடைய கடைசி போட்டியிலும் பரிதாப தோல்வியை சந்தித்து இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. மறுபுறம் பந்து வீச்சில் மிரட்டிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும் மிட்சேல் சேட்னர் மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து +2.113 என்ற அபாரமான ரன்ரேட் வித்தியாசத்துடன் இந்த உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த வெற்றி ஆஸ்திரேலிய ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஏனெனில் 5 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி அதே 5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை விட படுமோசமான ரன் ரேட்டை கொண்டுள்ளது. அதனால் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தால் கூட ஆஸ்திரேலியா 2வது அணியாக தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

அத்துடன் இறுதி முடிவு தெரிய நாளை வரை காத்திருக்கு வேண்டியுள்ளது. ஏனெனில் நாளை நடைபெறும் இலங்கைக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் அதிகப்படியான ரன் ரேட் கொண்டுள்ள இங்கிலாந்து சாதாரண வெற்றியை பதிவு செய்தாலே எளிதாக 2வது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். அந்த வகையில் தற்சமயத்தில் இங்கிலாந்துக்கு 70% அதிகப்படியான வாய்ப்புள்ளது.

அதனால் தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் நாளைய போட்டியில் இலங்கையிடம் இங்கிலாந்து தோற்க வேண்டும் என்றும் கடவுளை வேண்டிக் கொள்கிறார்கள். ஒருவேளை அப்ப்டி நடைபெறாமல் போனால் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் வெளியேறிய அவமானத்தை ஆஸ்திரேலியா சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement