வெறும் 5 ஃபோர்ஸ் 16 முரட்டு சிக்ஸ்.. ஆலன் உலக சாதனை.. கேரக்டர் மாறாத பாகிஸ்தானை பொளந்த நியூசிலாந்து

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் இத்தொடரை வெல்ல 3வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது.

ஜனவரி 17ஆம் தேதி டுனிடின் நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் ஃபின் ஆலன் பாகிஸ்தான் பவுலர்களை ஆரம்பம் முதலே சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

மிரட்டிய நியூஸிலாந்து:
அவருடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிம் ஷைஃபர்ட் 31 (23) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த டார்ல் மிட்சேல் 8 ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் பாகிஸ்தான் பவுலர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு பந்தாடிய ஃபின் ஆலன் சதமடித்து வெறும் 5 பவுண்டரி 16 வெறித்தனமான சிக்ஸர்களை பறக்க விட்டு 137 (62) ரன்களை விளாசி அவுட்டானார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்தார்.

இதற்கு முன் 2012இல் வங்கதேசத்திற்கு எதிராக முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் 123 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் ஒரு டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ஆப்கானிஸ்தானின் ஹசரத்துல்லா சாஸாய் (இருவரும் தலா 16) உலக சாதனையும் அவர் சமன் செய்தார். அவரது அதிரடியால் 20 ஓவர்களில் நியூசிலாந்து 224/7 ரன்கள் எடுத்த நிலையில் வள்ளலாக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 225 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் சாய்ம் ஆயுப் 10, முகமத் ரிஸ்வான் 24 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

ஆனால் எதிர்புறம் பகார் ஜமான் 19, அசாம் கான் 10, இப்திகார் அகமது 1, முகமது நவாஸ் 28 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் பாபர் அஸாம் முடிந்தளவுக்கு 58 (37) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவர்களில் 179/7 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் மீண்டும் தோற்றது. அதன் காரணமாக 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ 2 விக்கெட்களை எடுத்தார்.

இதையும் படிங்க: இன்னும் 6 ரன் போதும்.. டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக விராட் கோலி படைக்கப்போகும் – மாபெரும் சாதனை

முன்னதாக 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்வியால் பாபர் அசாம் கேப்டனாக விலகினார். அவரைத் தொடர்ந்து முகமது ஹபீஸ் புதிய இயக்குனராகவும் சாகின் அப்ரிடி புதிய டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். அதனால் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் சந்திக்காமல் அதே கேரக்டரில் விளையாடியதால் தோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement