ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடருக்குப்பின் நியூசிலாந்து தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 91க்கு ஆல் அவுட் செய்த நியூசிலாந்து எளிதாக வெற்றி பெற்றது. அந்த நிலையில் 2வது போட்டி மார்ச் 18ஆம் தேதி டுனிடின் நகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. மழையால் தலா 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் ஆட்டத்தை துவங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே ஹசன் நவாஸ் டக் அவுட்டானார். அதே போல மறுபுறம் தடுமாறிய முகமது ஹாரிஸ் 11 (10) ரன்னில் நடையைக் கட்டினார்.
நொறுக்கப்பட்ட பாகிஸ்தான்:
மிடில் ஆர்டரில் கேப்டன் சல்மான் ஆகா பொறுப்புடன் அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 46 (28) ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் இர்ஃபான் கான் 11, குஸ்தில் ஷா 2, சதாப் கான் 26, அப்துல் சமத் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இறுதியில் ஷாஹின் அப்ரிடி 22* (14) ரன்கள் எடுத்த உதவியுடன் 15 ஓவரில் பாகிஸ்தான் 135-9 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு ஜேக்கப் டுபி, பென் சீர்ஸ், இஸ் சோதி, ஜிம்மி நீசம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்துக்கு டிம் சைபஃர்ட் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார். மறுபுறம் ஷாஹீன் அப்ரிடி வீசிய 3வது ஓவரில் ஃபின் ஆலன் 6, 6, 0, 2, 6, 6 என 4 சிக்ஸர்களுடன் மொத்தம் 26 ரன்களை நொறுக்கினார். அந்த வகையில் 4.4 ஓவரில் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் சைபர்ட் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45 (22) ரன்களில் அவுட்டானார்.
ஜிம்பாப்வேவை தாண்ட முடியல:
அவருடன் விளையாடிய ஆலன் 38 (16) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த டேரில் மிட்சேல் 14, ஜிம்மி நீசம் 5 ரன்களில் அவுட்டானாலும் மிட்சேல் ஹே 21*, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 5* ரன்கள் எடுத்தனர். அதனால் 13.1 ஓவரிலேயே 137-5 ரன்களை எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலையை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 2000 – 2008இல் பாக், ஆஸி, இங்கிலாந்தை ஜெய்ச்ச ரூட்டை ஃபாலோ பண்ணுங்க.. இந்திய அணிக்கு கங்குலி ஆலோசனை
பாகிஸ்தானுக்கு ஹரிஷ் ரவூப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 16 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் 11 தோல்விகள் 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த 4 வெற்றிகளை ஜிம்பாப்வே (2), கனடா (1), அயர்லாந்துக்கு (1) எதிராக பெற்றுள்ளது. இதிலிருந்து ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளை தாண்டி பாகிஸ்தான் வெற்றி பெற முடியாமல் திணறுவது நிரூபணமாவது குறிப்பிடத்தக்கது.