ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் போராடி தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அடுத்ததாக தங்களது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. அந்த சுற்றுப்பயணத்தில் மொத்தம் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலாவதாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் மார்ச் 16ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முகமது ஹாரிஸ் – ஹசன் நவாஸ் ஆகிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள். போதாவுறைக்கு அடுத்ததாக வந்த இர்பான் கான் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
பாகிஸ்தான் சொதப்பல்:
அதனால் 1-3 என ஆரம்பத்திலேயே திணறிய பாகிஸ்தானுக்கு நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் ஆகா சல்மான் 18 (20) ரன்களில் அவுட்டானார். ஆனால் மிடில் ஆர்டரில் சடாப் கான் 3, அப்துல் சமத் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர் இறுதியில் குஸ்தில் சா மெதுவாக விளையாடி அதிகபட்சமாக 32 (30) ரன்கள் எடுத்தும் 18.4 ஓவரில் பாகிஸ்தான் வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 100 ரன்கள் கூட எடுக்க முடியாமல் பாகிஸ்தான் மோசமான சாதனை படைத்தது. அத்துடன் நியூஸிலாந்துக்கு எதிராக தங்களது குறைந்தபட்ச டி20 ஸ்கோரை (91) பதிவு செய்து பாகிஸ்தான் மற்றொரு மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டு வெலிங்டன் நகரில் 101க்கு ஆல் அவுட்டானதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும்.
வெந்த புண்ணில்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கைல் ஜெமிசன் 3, ஜேக்கப் டுஃபி 4, இஸ் சோதி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய நியூஸிலாந்துக்கு டிம் சைபஃர்ட் 44 (29), ஃபின் ஆலன் 29* (17), டிம் ராபின்சன் 18* (15) ரன்களை அதிரடியாக எடுத்தனர். அதனால் 10.1 ஓவரிலேயே 92-1 ரன்களை எடுத்த நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: 8 ரன்ஸ்.. ஹாட்ரிக் வருடமாக டெல்லிக்கு நேர்ந்த சோகம்.. மும்பை 12வது கோப்பையுடன் தொட முடியாத சாதனை
மறுபுறம் சொந்த மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் மோசமான உலகச் சாதனை படைத்த பாகிஸ்தான் ஏற்கனவே வேதனையில் இருக்கிறது. அதனால் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். எனவே புதிய வீரர்களுடன் இத்தொடரில் அசத்தும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சமீபத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்ற நியூஸிலாந்து இங்கேயும் முதல் போட்டியிலேயே 91க்கு சுருட்டி ஓடவிட்டு பாகிஸ்தான் ரசிகர்களின் வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது.