நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் ஜனவரி 14ஆம் தேதி ஹமில்டன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலனுடன் சேர்ந்து 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே 20 (15) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக 26 (15) ரன்கள் எடுத்து காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து பாகிஸ்தான் பவுலர்களைப் பந்தாடிய ஃபின் ஆலன் 7 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்து 74 (41) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தடுமாறும் பாகிஸ்தான்:
ஆனால் அதற்கடுத்ததாக வந்த டார்ல் மிட்சேல் 17 (10) கிளன் பிலிப்ஸ் 13 (9) மார்க் சேப்மேன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் மிட்சேல் சான்ட்னர் அதிரடியாக 25 (13) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் நியூசிலாந்து 194/8 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3, அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்களை சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 195 என்ற கடினமான இலக்கை சேசிங் செய்த பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் சாய்ம் ஆயுப் 1, முகமது ரிஸ்வான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 10/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த பகார் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி அதிரடியாக விளையாடினர்.
அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு பாகிஸ்தானை காப்பாற்றிய இந்த ஜோடியில் பக்கார் ஜமான் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 50 (25) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த இப்திகார் அகமது 4, அசாம் கான் 2, ஆமீர் ஜமால் 9 ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினர். அதனால் மறுபுறம் போராடிய பாபர் அசாமும் 66 (43) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக வந்த வீரர்களும் ஏமாற்றத்தை கொடுத்ததால் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இதையும் படிங்க: 194 ரன்ஸ்.. மீண்டும் வெளுத்த நியூசிலாந்து.. புதிய கேப்டன் ஷாஹீன் அப்ரிடி தலைமையில் திணறும் பாகிஸ்தான்
குறிப்பாக 2023 உலகக் கோப்பை தோல்வியால் பதவி விலகிய பாபர் அஸாமுக்கு பின்பு புதிய டி20 கேப்டனாக பொறுப்பேற்ற சாகின் அப்ரிடி முதல் முறையாக இத்தொடரில் பாகிஸ்தானை வழி நடத்துகிறார். ஆனால் அவருடைய தலைமையிலும் மாற்றத்தை சந்திக்காத பாகிஸ்தான் முதலிரண்டு போட்டியிலேயே தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. மறுபுறம் 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து சார்பில் இப்போட்டியில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.