IND vs NZ : கைக்கு கிடைத்த வெற்றியை இப்படியா கோட்டை விடுவீங்க? – இந்திய அணி பெற்ற அதிர்ச்சி தோல்வி (ரசிகர்கள் கொதிப்பு)

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பின் நியூசிலாந்துக்கு பயணித்து முதலில் பங்கேற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா அடுத்ததாக சிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2023 ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் முதல் தொடராக கருதப்படும் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. அப்போட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 306/7 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 23 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (65) ரன்களிலும் மறுபுறம் அசத்திய கேப்டன் ஷிகர் தவான் 13 பவுண்டரியுடன் 72 (77) ரன்களிலும் அவுட்டானார்கள். அப்போது வந்த ரிஷப் பண்ட் 15 (23), சூரியகுமார் யாதவ் 4 (3) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 160/4 என மிடில் ஓவர்களில் தடுமாறிய இந்தியாவை ஷ்ரேயஸ் ஐயருடன் 5வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்றிய சஞ்சு சாம்சன் 4 பவுண்டரியுடன் கடைசி நேரத்தில் 36 (38) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 80 (76) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்கவிட்ட வாஷிங்டன் சுந்தர் 37* (16) ரன்களை விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி மற்றும் லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 307 ரன்களை துரத்திய அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 22 (25) ரன்களும் டேவோன் கான்வே 24 (42) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த டார்ல் மிச்சேல் 11 (16) ரன்களில் உம்ரான் மாலிக் வேகத்தில் அவுட்டானார்.

அதனால் 88/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற நியூசிலாந்துக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் துணை கேப்டன் டாம் லாதமுடன் இணைந்து நங்கூரத்தை போட்டு சரிவை சரி செய்ய போராடினார். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி விக்கட்டை எளிதாக விட்டுவிடக்கூடாது என்ற உறுதியுடன் இந்திய பவுலர்களை எதிர்கொண்டு நியூசிலாந்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. ஒரு கட்டத்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்தும் திருப்தியடையாத இந்த ஜோடி அவுட்டாகாமல் அடம் பிடித்து இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய நிலையில் அதிரடியாக விளையாடிய டாம் லாதம் சதமடித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் மெதுவாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் அரை சதமடித்த நிலையில் இவர்களைப் பிரிக்க கேப்டன் தவான் மற்றும் இந்திய பவுலர்கள் போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் 47.1 ஓவரிலேயே 309/3 ரன்களை விளாசி நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதில் வில்லியம்சன் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 94* (98) ரன்கள் எடுத்த நிலையில் சதமடித்த லாதம் 19 பவுண்டரி 5 சிக்சருடன் 145* (104) ரன்கள் குவித்தார்.

அதனால் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. மறுபுறம் பந்து வீச்சில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் இதர பவுலர்கள் குறிப்பாக ஸ்பின்னர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் 306 ரன்களை குவித்து ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை கைக்குள் வைத்திருந்த வந்த இந்தியா கடைசி 30 ஓவரில் வில்லியம்சன் – லாதாம் ஜோடியை பிரிக்க முடியாமல் வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement