69/6 என சரிந்த போது அவமானத்தை தகர்த்த கிளன் பிலிப்ஸ்.. 15 வருடத்துக்கு பின் வங்கதேசத்தில் சாதித்த நியூஸிலாந்து

BAN vs NZ 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அடுத்ததாக அருகில் உள்ள வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் ஆரம்பத்திலேயே வென்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே நியூசிலாந்துக்கு அடியை கொடுத்து முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி டிசம்பர் 6ஆம் தேதி தர்காவில் துவங்கியது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் ஆரம்ப முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 31 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் மற்றும் மிட்சேல் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அடங்க மறுத்த நியூஸிலாந்து:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 4, டேவோன் கான்வே 11, கேன் வில்லியம்சன் 13, ஹென்றி நிக்கோலஸ் 1, டாம் ப்ளன்டல் 0, டார்ல் மிட்சேல் 18 என முக்கிய வீரர்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 97/7 என்ற மெகா சரிவை சந்தித்த நியூசிலாந்து 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது லோயர் மிடில் ஆர்டரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் 9 பவுண்டரி 4 சிக்சருடன் 87 (72) ரன்கள் குவித்து காப்பாற்றினார்.

அதனால் தப்பிய நியூஸிலாந்து 180 ரன்கள் எடுத்ததுடன் 8 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்திய நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன், டைஜுல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதிகபட்சமாக ஜாகிர் ஹசன் 59 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில் 136 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு மீண்டும் டாம் லாதம் 26, டேவோன் கான்வே 2, கேன் வில்லியம்சன் 11, ஹென்றி நிக்கோலஸ் 3, டார்ல் மிட்சேல் 19, டாம் பிளண்டல் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அப்போதும் வங்கதேசத்திற்கு சிம்ம சொப்பனமாக மாறிய கிளன் பிலிப்ஸ் தில்லான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 40* (48) ரன்கள் குவித்தார்.

அவருடன் சான்ட்னர் 35* (39) ரன்கள் எடுத்ததால் 139/6 ரன்களை எடுத்த நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 1 (2) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்திடம் ஒரு தொடரில் சந்திக்க வேண்டிய அவமான தோல்வியை தவிர்த்தது. அத்துடன் வங்கதேச மண்ணில் 2008க்குப்பின் 15 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து நியூசிலாந்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: அவமானத்தை தகர்த்த கிளன் பிலிப்ஸ்.. 15 வருடத்துக்கு பின் வங்கதேச மண்ணில் நியூஸிலாந்து சாதித்தது எப்படி?

அந்த வகையில் மொத்தம் 3 விக்கெட்களுடன் 87, 35* ரன்கள் எடுத்து நியூசிலாந்தை அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றிய கிளன் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் மெஹதி ஹசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் பேட்டிங்கில் சொதப்பியதால் நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை வங்கதேசம் தவற விட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டது.

Advertisement