AUS vs NZ : ஆஸியை சொந்த மண்ணில் பழிக்கு பழி – 15 வரலாற்றை மாற்றி எழுதிய நியூசிலாந்து புதிய சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்று முடிந்து முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்று துவங்கியுள்ளது. அதில் அக்டோபர் 22ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு துவங்கிய 13ஆவது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து எதிர்கொண்டது. புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த மிரட்டிய தொடக்க வீரர் ஃபின் ஆலன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (16) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் அவருடன் பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே உடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுப்படுத்தினாலும் மெதுவாக விளையாடி 23 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 12 (10) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய டேவோன் கான்வே அரைசதம் கடந்து 7 பவுண்டரி 2 சிக்சருடன் 92* (58) ரன்களை விளாசினார். அவருடன் கடைசியில் 2 சிக்சர்களை பறக்க விட்ட ஜிம்மி நீஷம் 26* (13) ரன்களுடன் ஃபினிசிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் நியூசிலாந்து 200/3 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சொதப்பிய ஆஸ்திரேலியா:
சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன்பின் 200 ரன்களை துரத்திய அந்த அணிக்கு நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். குறிப்பாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் துரதிஸ்டவசமாக 5 (6) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக கேப்டன் ஆரோன் பின்ச் 13 (11) மிட்செல் மார்ஷ் 16 (12) மார்க்கஸ் ஸ்டோனிஸ் 28 (20) டிம் டேவிட் 11 (8) மேத்தியூ வேட் 2 (4) என முக்கிய வீரர்கள் அனைவரும் பொறுப்பின்றி அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அதனால் திண்டாடிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (20) ரன்களும் பட் கம்மின்ஸ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (18) ரன்களும் எடுத்து அவுட்டானதால் 17.1 ஓவரிலேயே வெறும் 111 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது. அந்தளவுக்கு துல்லியமாகவும் அற்புதமாகவும் பந்து வீசிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி, மிட்சேல் சாட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

15 வருட வரலாறு:
அதன் வாயிலாக 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து முதல் போட்டியிலேயே வெற்றியை சுவைத்து குரூப் ஏ பட்டியலில் முதலிடம் பிடித்து மிரட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு 92* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பைனலில் தங்களை தோற்கடித்த ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை அதன் சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்த நியூசிலாந்து தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது.

அதை விட டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு போட்டியில் தோற்கடித்து நியூசிலாந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆம் 2007 முதல் கடந்த 15 வருடங்களில் இதுவரை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் எதிர்கொண்டு தொடர்ச்சியாக தோல்வியடைந்த நியூசிலாந்து முதல் முறையாக இன்று வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

1. அதுபோக டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையையும் நியூசிலாந்து படைத்துள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 2009க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து வென்றுள்ளது.

2. மேலும் 2007 முதல் உலக கோப்பையில் விளையாடி வரும் அந்த அணி முதல் முறையாக இன்று தான் ஒரு போட்டியில் 200 ரன்களை பதிவு செய்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1.200/3 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*
2. 198/5 – அயர்லாந்துக்கு எதிராக, 2009
3. 191/5 – வங்கதேசத்துக்கு எதிராக, 2012

3. மறுபுறம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 111 – நியூசிலாந்துக்கு எதிராக, 2022*
2. 127 – பாகிஸ்தானுக்கு எதிராக

Advertisement