தப்பை மறைத்து பெனால்டி கொடுக்காம கோலியும், அம்பயரும் ஏமாத்திட்டாங்க – வங்கதேச வீரர் ஆதங்கம், இந்தியர்கள் பதிலடி

Fake Fielding
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நவம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 35வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அடிலெய்ட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேஎல் ராகுல் 50 (32) ரன்களும் விராட் கோலி 64* (44) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் 184/6 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து 185 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு பவர் பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

அதனால் 7 ஓவர்களிலேயே 66/0 ரன்கள் எடுத்த வங்கதேசம் டிஎல்எஸ் விதிமுறைப்படி 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்ததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது அதிர்ஷ்டமாக நின்ற மழையால் 16 ஓவரில் வங்கதேசத்துக்கு 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் மிரட்டிய லிட்டன் தாஸை 60 (27) ரன்களில் கேஎல் ராகுல் ரன் அவுட் செய்து திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதை பயன்படுத்திய இந்தியா அடுத்து வந்த கேப்டன் சாகிப் அல் ஹசன் உள்ளிட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

ஏமாத்திட்டாங்க:
ஆனாலும் கடைசி நேரத்தில் நுருள் ஹசன் 25* (14) ரன்களும் தஸ்கின் அஹ்மத் 12* (7) ரன்களும் எடுத்ததால் வெற்றி நெருங்கிய வங்கதேசத்திற்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தடுமாறினாலும் கடைசி ஓவரில் கச்சிதமாக செயல்பட்ட அர்ஷிதீப் சிங் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார். அதனால் பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்த இந்தியா அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி ஒரு பவுன்சர் பந்தை நோ-பால் கேட்ட போதும் மழை நின்ற போதும் நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக வங்கதேச ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் மழைக்கு பின் பரபரப்பாக ரன்கள் எடுத்துக் கொண்டிருந்த போது விராட் கோலி போலியான பீல்டிங் செய்து தங்களை ஏமாற்றியதாக 25* ரன்கள் எடுத்து போராடிய வங்கதேச வீரர் நூருல் ஹுசைன் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது வங்கதேசம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 7வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட லிட்டன் தாஸ் டீப் ஆஃப் சைட் திசையில் அடித்தார். அதை பவுண்டரி எல்லையின் அருகே நின்ற அக்சர் பட்டேல் தடுத்து நிறுத்தி தூக்கி எறிந்தார். அப்போது பாயிண்ட் பீல்டிங் இடத்தில் நின்று கொண்டிருந்த விராட் கோலி அதைப் பிடித்து எதிர்ப்புறம் அடிப்பது போல் போலியான பீல்டிங் செய்தார்.

- Advertisement -

ஆனால் கிரிக்கெட் விதிமுறைப்படி அது போன்ற போலியான பீல்டிங் செய்தால் பெனால்ட்டியாக 5 ரன்கள் வழங்க வேண்டும் என்ற நிலைமை இருந்தும் நடுவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதாக நுருள் ஹொசைன் குற்றம் சுமத்தியுள்ளார். ஒருவேளை அது கிடைத்திருந்தால் தாங்கள் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும் நிலையும் வந்திருக்காது என்று கூறும் அவர் இது பற்றி போட்டி முடிந்தபின் பேசியது பின்வருமாறு.

“மழைக்குப்பின் போட்டியில் ஈரப்பதமாக இருந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். இதைப் பற்றி நாம் பேசும் போது அந்த போலியான தூக்கி எறிதலையும் (ஃபேக் த்ரோ) பேச வேண்டியுள்ளது. அந்த இடத்தில் 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்தால் போட்டி எங்களது பக்கம் வந்திருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

ஆனால் அந்த தருணத்தில் பந்தை எடுத்த அக்சர் படேல் பந்து வீசும் பகுதியை நோக்கி ஓடி வந்த பேட்ஸ்மேனை பார்த்து தூக்கி எறிந்தார். அதே சமயம் விக்கெட் கீப்பர் திசையை நோக்கி ஓடிய பேட்ஸ்மேனை பார்த்து போலியாக பந்தை தூக்கி எறிவது போல் விராட் கோலி ஃபீல்டிங் செய்தார். ஆனால் முதல் ஃபீல்டர் எந்த திசையில் பந்தை எறிகிறாரோ அதன் குறுக்கே நின்று தான் மற்றொரு ஃபீல்டர் போலியான ஃபீல்டிங் செய்யக்கூடாது என்பது அடிப்படை விதிமுறையாகும்.

இதையும் படிங்க : INDvsBAN : இங்கு இப்படி விளையாடுனா தான் ஜெயிக்க முடியும். அதான் இந்த அதிரடி – ஆட்டநாயகன் கோலி பேட்டி

அதன்படி அந்த இடத்தில் விராட் கோலியின் மீது தவறு இல்லாததால் நடுவர்கள் தண்டனை கொடுக்கவில்லை என்று ஹர்ஷா போக்லே உள்ளிட்ட இந்தியர்கள் இதற்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement