
நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 2வது போட்டியில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதற்கு ஈடாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பி விமர்சனங்களை அடித்து நொறுக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சூப்பர் ஸ்டாராக போற்றப்படும் அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை.
களமிறங்கினாலே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு ஆரம்பம் முதல் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கியுள்ள அவரை சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பார்ம் அவுட்டாகி என்று விமர்சிக்கும் நிறைய முன்னாள் வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனாலும் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து 2019க்குப்பின் அதிக ரன்களை எடுத்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள அவருக்கு நிறைய வெளிநாட்டவர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
ஏத்துக்க முடியாது:
இருப்பினும் தனது தரத்திற்கு செயல்பட வேண்டும் என்பதற்காக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தமான முதல் போட்டியில் கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டானதும் களமிறங்கி ரோஹித் சர்மாவுடன் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தீர்மானித்த முக்கியமான 35 ரன்களை எடுத்தார். ஆனாலும் 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்த அவர் மெதுவாக விளையாடியதற்காக மீண்டும் விமர்சனங்களை சந்தித்தார்.
அந்த நிலைமையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவுடன் கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் இம்முறை 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (44) ரன்களை 134.09 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். மேலும் நேற்றைய போட்டியில் கேட்ச் எதுவும் கொடுக்காமல் தடுமாறாமல் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அவர் விளையாடியதை பார்த்த நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பார்முக்கு திரும்பி விட்டதாக பாராட்டுகின்றனர்.
ஆனால் ஹாங்காங் போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக சுமாரான பந்துவீச்சில் சேர்த்த 59 ரன்களை வைத்து விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்று சொல்ல முடியாது என முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த ரன்கள் அவருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று கூறியுள்ள அவர் இது பற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி அல்லது எந்த பேட்ஸ்மேனையும் மதிப்பிடுவதற்கு இது சரியான எதிரணி கிடையாது. ஆனாலும் எதிரணி எதுவாக இருந்தாலும் உழைத்து நீங்கள் சேர்த்த ரன்கள் முக்கியமானது. அவர் பழைய ஃபார்மில் விளையாடினார் அல்லது அந்த பார்முக்கு விரைவில் வருவார் என்று இந்த இன்னிங்ஸை வைத்து நீங்கள் மதிப்பிட முடியாது. அந்த வகையில் அடுத்து வரும் போட்டிகளில் அவர் இன்னும் சிறந்த பார்முக்கு வருவார் என்று நம்புகிறேன். ஏனெனில் இப்போட்டியில் எதிரணியில் அந்தளவுக்கு பவுலிங் தரமாக இல்லை”
“60 ரன்கள் என்பது 60 ரன்கள் தான். ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கும் இந்த ரன்களை எடுக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் அவர்கள் எடுக்காத 60 ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். எனவே கடினமாக உழைத்து எடுத்துள்ள இந்த ரன்கள் அவருக்கு நல்ல தன்னம்பிக்கையை கொடுக்கும். அதேசமயம் சிறிய இடைவெளிக்கு பின் விளையாட துவங்கியுள்ள அவருக்கு இதுபோன்ற இன்னிங்ஸ் அவசியமானதாகும். இதை அடிப்பது யாருக்குமே சுலபமாக இருக்காது”
“பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் கை கொடுத்தது. அவர்களுடைய பந்துவீச்சும் தரமாக இருந்தது. ஆனால் அடுத்து வரும் போட்டிகளில் ஆப்கானித்தான் அல்லது பாகிஸ்தான் என எதிரணி எதுவாக இருந்தாலும் விராட் கோலி தற்போது தன்னம்பிக்கையுடன் முன்பை விட முன்னேறிய பார்மில் இருக்கிறார்” என்று கூறினார். அதாவது பாகிஸ்தான் போன்ற தரமான பந்துவீச்சை கொண்டு எதிரணிக்கு எதிராக பெரிய இன்னிங்சை அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கும் போது தான் விராட் கோலியின் உண்மையான பார்மை மதிப்பிட முடியும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.