தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் படிப்படியாக முன்னேறிய அவர் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளிய அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.
இருப்பினும் தோனிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வெளிநாடுகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் செட்டாக மாட்டார் என்று கருதினார். அதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினுக்கு பதில் பெரும்பாலும் ரவீந்திர ஜடேஜாவை தேர்ந்தெடுத்த அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் கழற்றி விட்டார். அதன் பின் மானம் தளராத அஸ்வின் 2023 உலகக் கோப்பை வரை போராடி அவ்வப்போது கம்பேக் கொடுத்தார்.
வெளிநாட்டு டெஸ்ட்:
அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே அசத்தி வரும் அஸ்வின் சமீபத்தில் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். ஆனாலும் இதுவரை அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேட்டிங் செய்யும் திறமையை கொண்டிருப்பதால் வெளிநாடுகளில் அஸ்வினை விட ரவீந்திர ஜடேஜா சிறந்தவர் என்று இந்திய கேப்டன்கள் கருதுகின்றனர்.
அதன் உச்சமாக விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மாவும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஸ்வினை கழற்றி விட்டார். அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவால் தமக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பறி போகவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
பொறாமை இல்லை:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் விளையாடாதது ரவீந்திர ஜடேஜாவின் தவறல்ல. நான் விளையாடுவதற்காக அவரை ஒதுக்கி வைப்பது போன்ற பொறாமையும் எனக்கு இல்லை. பொறாமை என்ற கருத்து நாம் தாண்டி செல்ல வேண்டிய ஒரு நிபந்தனையாகும். ரவீந்திர ஜடேஜா நான் பார்த்த ஒரு திறமையான கிரிக்கெட்டர். அவரிடம் அனைத்தும் இயற்கையாக இருக்கும்”
இதையும் படிங்க: 1980ஸ் வெ.இ மாதிரி இந்தியா முன்னேறிருக்கு.. அதுக்கு அந்த வெற்றிகள் தான் சாட்சி.. ரவி சாஸ்திரி பாராட்டு
“ரவீந்திர ஜடேஜா எதை செய்ய மாட்டார் என்பதைப் பற்றி நான் சிந்திப்பேன். எங்களுக்குள் புரிந்து கொள்வதற்காக கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் வலுவான உறவை கொண்டுள்ளோம்” என்று கூறினார். அப்படி வெளிநாடுகளில் தொடர்ந்து வாய்ப்பு பெறாவிட்டாலும் சொந்த மண்ணில் கடந்த 10 வருடங்களாக இந்தியா டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருக்க அஸ்வின் – ஜடேஜா முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



