2002 நாட்வெஸ்ட் தொடரின் வெற்றியின் அறியாத பின்னணியை பகிரும் முன்னாள் வீரர் – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

கடந்த 2000ஆம் ஆண்டு வாக்கில் சூதாட்ட புகாரில் சிக்கியபோது கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி சேவாக் முதல் தோனி வரை நிறைய தரமான வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்த சில வருடங்களிலேயே வெற்றி நடை போடும் அணியாக இந்தியாவை மாற்றினார். அவரது தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக வெல்லும் வித்தையை கற்றுக்கொண்டது. அவரது தலைமையில் இந்தியா பதிவு செய்த சரித்திர வெற்றிகளில் 2002இல் இங்கிலாந்து மண்ணில் வென்ற நாட்வெஸ்ட முத்தரப்பு கோப்பை மறக்க முடியாத ஒன்றாகும்.

kaif

- Advertisement -

3 அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் இலங்கையை தோற்கடித்த இங்கிலாந்தும் இந்தியாவும் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயித்த 326 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது கேப்டன் கங்குலி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 146/5 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது.

கைப் – யுவராஜ்:
அந்த காலகட்டத்தில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்வதெல்லாம் கடினமானதாக பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்த இந்தியாவின் தோல்வி உறுதியென்று அனைவரும் நினைத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் பயமறியாத கன்றுகளாக களமிறங்கி அழுத்தத்திற்கு அஞ்சாமல் 146 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு இங்கிலாந்தை திணறடித்த யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர்.

kaif 1

அதில் முக்கிய நேரத்தில் யுவராஜ் சிங் ஆட்டமிழந்ததால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு நான் இருக்கிறேன் என்ற வகையில் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை விளையாடிய முகமது கைஃப் 87* (75) ரன்களை குவித்து இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். மேலும் அதற்கு முந்தைய மாதம் மும்பையில் நடந்த ஒரு போட்டியில் வென்றபோது சட்டையை கழற்றி அவமானப்படுத்திய பிளின்டாஃப்புக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் பால்கனியில் சவுரவ் கங்குலி சட்டையை கழற்றி சுழற்றி கொடுத்த மாஸ் பதிலடியை யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

சாப்பாடு நியாபகமில்ல:
அப்படி நிறைய வரலாற்று பின்னணிகளை கொண்டுள்ள அந்த போட்டியில் ஏற்பட்ட பரபரப்பால் மதிய உணவை கூட சாப்பிட நிறைய வீரர்கள் மறந்து போனதாக ஆட்டநாயகன் விருது வென்ற முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Kaif

“நாங்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்தோம். மேலும் எங்களது பந்து வீச்சாளர்கள் அந்தக் காலத்திலேயே 325 ரன்கள் கொடுத்ததால் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தனர். அப்போது ஜான் ரைட் (பயிற்சியாளர்) முகத்தை பார்த்தது இன்னும் எனது நினைவில் உள்ளது. அவர் கோபத்தில் எதுவுமே பேசவில்லை. ஆனால் அவருடைய பாடி லாங்குவேஜ் நல்ல உணர்வுடன் இல்லை என்பதை காட்டியது. அவர் மிகவும் ஓய்வின்றி தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்”

- Advertisement -

“அதனால் அவரிடம் பேசாமல் நாங்கள் விலகியே இருந்தோம். அந்த சமயத்தில் இருந்த பரபரப்பில் நாங்கள் யாருமே பெரும்பாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. மேலும் சிலர் மதிய உணவுக்கு கூட செல்லவில்லை. அந்த போட்டியின் சேசிங் துவங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக தாதா கங்குலி எங்களை அழைத்து “அவர்கள் நம்மை அடித்துள்ளார்கள், எனவே நாமும் அடிப்போம்” என்று கூறினார்”

“மேலும் அந்த தொடரின் லீக் சுற்றில் நாம் இங்கிலாந்தை தோற்கடித்தது என்பதை அவர் எங்களுக்கு நினைவுபடுத்தினார். மேலும் அன்றைய நாளில் முதல் 15 ஓவர்களில் எப்படியாவது 90 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. அதை செய்தது இறுதியில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அப்போட்டியில் நானும் யுவராஜ் சிங்கும் பார்ட்னர்ஷிப் அமைத்த பின்பு தான் உடைமாற்றும் அறையில் இருந்தவர்கள் நம்மால் வெற்றிபெற முடியும் என்று நம்ப ஆரம்பித்தனர்”

இதையும் படிங்க : வீடியோ : ஒருநாள் விடுமுறையை ஜாலியாக கடலில் என்ஜாய் செய்த இந்திய வீரர்கள் – இது எல்லாமே அவரோட பிளானாம்

“குறிப்பாக நாங்கள் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த போது உடை மாற்றும் அறையில் அமர்ந்திருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் அனைவரையும் கேட்டுக் கொண்டார். ஏனெனில் அதற்கு முன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத நிலைமையில் அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தால் வெற்றி பெறுவோம் என்ற ஒரு ரசிகருக்கு ஏற்படும் குருட்டு நம்பிக்கையை சச்சின் அனைவரையும் பின்பற்ற சொன்னார்” என்று கூறினார்.

Advertisement