
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்ல முன்னதாகவே பயணித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பயிற்சி போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
அவர்களது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா 2016க்குப்பின் 5 வருடங்கள் கழித்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கியதைப் போல் சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வியால் பின்னடைவை சந்தித்த இந்தியா அதன்பின் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து மீண்டும் வெற்றிப் பாதையில் பயணித்து உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
என்னோட போகட்டும்:
அந்த வகையில் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்து புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த ஒரு வருடமாக இந்திய அணியின் செயல்பாடுகள் ஓரளவு சிறப்பாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அவரது தலைமையில் தரமான வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி என்ற பெயரில் வென்றாலும் தோற்றாலும் ஒவ்வொரு போட்டிக்கும் பின்பும் ஒவ்வொரு தொடருக்கு பின்பும் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்படுவது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பும்ரா போன்ற முக்கிய வீரர் காயமடைந்து வெளியேறும் போது அவருக்கு பதில் பெஞ்சில் இருந்து விளையாட வரும் வீரர் தரமானவராகவும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதாலேயே வருங்காலத்தை கருத்தில் கொண்டு இது போன்ற மாற்றங்கள் செய்யப்படுவதாக நியாயமான பதிலை டிராவிட் கொடுத்தார். முன்னதாக இந்தியாவுக்காக விளையாடும் போது பூமியை போன்ற அமைதியான குணத்தைக் கொண்ட அவர் களத்தில் பேட்டிங் செய்கையில் பொறுமையின் சிகரமாக நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரராக சாதனை படைத்துள்ள அவரை டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்றும் பெருஞ்சுவர், தடுப்புச்சுவர் என்றும் ரசிகர்கள் போற்றுகிறார்கள். ஆனால் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படும் போது அதே அணுகு முறையை பின்பற்றாமல் தற்போது வளர்ந்துள்ள நவீன கிரிக்கெட்டுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிரடியான அணுகு முறையை பின்பற்றுமாறு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சொல்லி கொடுப்பதாக ட்ராவிட் கூறியுள்ளார்.
அதாவது தம்முடைய பழைய பேட்டிங் ஸ்டைல் தம்முடன் போகட்டும் என்ற வகையில் பேசும் அவர் தற்சமயத்தில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதுபற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இல்லை. எங்களுடைய வீரர்களிடம் பந்துகளை தடுப்புச் சுவராக தடுத்து நிறுத்துமாறு நான் கூறுவதில்லை. நாங்கள் எங்களது வீரர்கள் அதிரடியாக அடிப்பதையே விரும்புகிறோம். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் வெற்றி நூலிழையில் தீர்மானிக்கப்படும். அதனால் இன்னமும் பழைய அணுகுமுறையை பற்றி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இருப்பினும் அதிலிருந்து நீங்கள் அனுபவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்”
“அதே சமயம் போட்டி நாளன்று எதிரணியும் உங்களை தோற்கடிக்கும் திறமை பெற்றிருப்பார்கள் என்பதால் அவர்களை விட அபாரமான கிரிக்கெட்டை நீங்கள் விளையாட வேண்டும். இப்போதெல்லாம் புதிய டெக்னாலஜி வந்து விட்டதால் பழைய நுணுக்கங்களை சுருக்கிக்கொண்டு புதிய தகவல்களை வீரர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருப்பது சவாலாக உள்ளது. ஏனெனில் அனைத்து தருணங்களும் வேகமாக கடந்து செல்லும் இந்த கிரிக்கெட் உங்களுக்கு நிறைய விரக்தியையும் சவாலை கொடுக்கிறது” என்று கூறினார்.