இந்தியாவிடம் தோற்றதில் அவமானம் இல்ல.. காரணம் இது தான்.. 4வது டெஸ்ட் பற்றி நாசர் ஹுசைன் கருத்து

Nasser Hussain 3
- Advertisement -

ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்றிருந்த இந்தியா 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இத்தொடரை வென்றுள்ளது. முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்த உதவியுடன் 353 ரன்கள் குவித்தது.

அதன் பின் களமிறங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் 73, துருவ் ஜுரேல் 90 ரன்கள் எடுத்தும் 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இப்போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் வலுவான நிலையுடன் வெற்றியை கையில் வைத்திருந்தது என்றே சொல்லலாம். ஆனால் மூன்றாவது நாளில் தீயாக செயல்பட்ட இந்தியா அந்த அணியை 145 ரன்களுக்கு சுருட்டி கடைசியில் 192 ரன்களையும் போராடி சேஸிங் செய்து வென்றது.

- Advertisement -

அவமானம் இல்ல:
அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் வெற்றி சரித்திரத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று விடாப்பிடியாக நின்ற இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான பஸ்பால் தலைமுறையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது.

அதனால் ஏமாற்றமடைந்த இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியை சரமாரியாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வெற்றி கண்ட இந்தியாவிடம் தங்களுடைய அணி தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடர் முழுவதும் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே விளையாடி வெற்றி கண்ட விதத்திற்கான பாராட்டுக்கு இந்தியா தகுதியான அணியாகும். ஷமி, விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போன்றவர்கள் இத்தொடரில் பெரும்பாலும் இல்லை. அந்த வகையில் முக்கிய வீரர்கள் இல்லாத பெரிய பட்டியலை கொண்டிருந்தாலும் இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியது”

“திறமை மட்டுமல்லாமல் மனதளவில் வலிமை இருப்பதால் சொந்த மண்ணில் மற்றுமொரு தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும். சொந்த மண்ணில் அவர்களுடைய வெற்றி விகிதம் அபாரமானதாக இருக்கிறது. எனவே இந்த இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததில் எந்த அவமானமும் இல்லை. அதே சமயம் மூன்றாவது நாளில் இப்போட்டியை தவற விட்டது போல் இத்தொடரில் இங்கிலாந்து கற்க நிறைய பாடம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement