சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் கருப்பு பட்டையெல்லாம் குத்திக்கொண்டு ஆட முடியாது என சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது இரண்டாவது லீக்கில் வலுவான கொல்கத்தா அணியை எதிர்கொள்கின்றது.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தோனி தலைமையிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக் தலைமையிலும் களம் இறங்குகின்றன. இரண்டாடுகளுக்கு பின்னர் சென்னை அணி தனது சொந்த மண்ணில் பல்வேறு இடர்களுக்கு இடையில் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடையே பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் பல தற்போது தீவிர போராட்டத்தில் குதித்துள்ளன. இந்தப்போராட்டத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் தற்போது தமிழக அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த தடைக்கோரியும் ஆங்காங்கே நடத்திவரும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதில் பேசிய வேல்முருகன் “தமிழகத்தில் இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது. அதையும் தாண்டி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் டிக்கெட் வாங்கி வைத்துள்ள எங்கள் ஆதரவாளர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்து போட்டியை நடத்தவிடாமல் போராடுவார்கள் என்று சவால் விட்டுள்ளார்.
வேல்முருகன் மட்டுமில்லாமல் பாரதிராஜா,இயக்குஞர் அமீர்,வெற்றிமாறன், கௌதமன் நடிகர் ரஜினி உட்பட பலரும் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்திட கூடாது என்று கோரிக்கைகளை வைத்துள்ளனர்.ரஜினி மட்டும் சென்னையில் நடைபெறும் போட்டியில் அணிவீரர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது உணர்வை வெளிப்படுத்திடலாம் என்று யோசனை தெரிவித்திருந்தார்.
ஆனால் சென்னை அணி நிர்வாகம் அவரது யோசனையை ஏற்க மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் “சென்னை அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடிடும் பேச்சுக்கே இடமில்லை” என்று தற்போது தெரிவித்துள்ளார்.