கழற்றிவிடப்பட்ட 2 முக்கிய வீரர்கள் – 3வது கோப்பையை வெல்ல அதிரடியான டி20 உ.கோ அணியை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ்

IND vs WI T20I
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்வதற்காக கடந்த ஒரு வருடமாக பல்வேறு இரு தரப்பு டி20 தொடர்களில் மோதி வந்த உலகின் அனைத்து அணிகளும் அதில் தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை கண்டறிந்து இறுதிகட்ட அணியை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஏற்கனவே 2 டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே அணியாகவும் வெற்றிகரமான அணியாகவும் திகழும் வெஸ்ட் இண்டீஸ் தங்களது அணியை அறிவித்துள்ளது. 70, 80களில் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 21ஆம் நூற்றாண்டில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலவீனமான அணியாக மாறியது.

ஆனால் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட டி20 கிரிக்கெட்டில் காட்டடி பேட்ஸ்மேன்களை கொண்டிருந்த அந்த அணி சரவெடியாக செயல்பட்டு 2012, 2016 ஆகிய வருடங்களில் டேரன் சம்மி தலைமையில் 2 கோப்பைகளை வென்று சாதனை படைத்து 20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய எழுச்சியை கண்டது. ஆனால் சமீப காலங்களில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் வீரர்களுக்கு தேவையான சம்பளத்தை கொடுக்க முடியாத நிலைக்கு வெஸ்ட் இண்டீஸ் வாரியம் தள்ளப்பட்டது.

- Advertisement -

முடிந்த சகாப்தம்:
அதன் காரணமாக நாட்டுப் பற்றுடன் விளையாட வேண்டிய நிறைய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் போன்ற வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்பதற்காக சர்வதேச கிரிக்கெட்டை புறக்கணித்தனர். அதனால் இளம் வீரர்களுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் சமீப காலங்களில் நிறைய தோல்விகளை சந்தித்து தரவரிசையில் கீழே சென்றது. அதன் காரணமாகவே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் இந்தியா போன்ற அணிகளுடன் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்த அந்த அணி தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளுடன் மோதி அதில் வென்றால் மட்டுமே முதன்மை சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற பரிதாப நிலைமையில் உள்ளது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்காக சமீபத்தில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிக்கலோஸ் பூரன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் நீண்ட நாட்கள் கழித்து தொடக்க வீரர் எவன் லெவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் 2012, 2016 ஆகிய வருடங்களில் உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய கிறிஸ் கெயில், ட்வயன் ப்ராவோ ஆகியோர் வயது காரணமாக ஓய்வு பெற்றதால் இந்த அணியில் இடம்பெறவில்லை. அத்துடன் டி20 லீக் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற கைரன் பொல்லார்ட்டும் இந்த அணியில் இடம் பெறவில்லை.

- Advertisement -

இதனால் ஒரு காலத்தில் உலகையே மிரட்டிய முரட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில் அந்த காட்டடி அணியில் முக்கிய வீரராக இருந்த ஆண்ட்ரே ரசல் சமீப காலங்களில் பணத்துக்காக தேசத்தை மறந்துவிட்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதால் இந்த அணியிலிருந்து அதிரடியாக கழற்றி விடப்பட்டுள்ளார். அதேபோல் அவரது வழியில் நடக்கும் மாயாஜால சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதில் இளம் ஸ்பின்னரான யானிக் காரிஷ் மற்றும் இளம் ஆல்-ரவுண்டரான ரேய்மன் ரெய்ப்ர் ஆகியோர் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தவிர ஜேசன் ஹோல்டர் ரோவ்மன் போவல், செல்டன் காட்ரல், சிம்ரோன் ஹெட்மையர், ஓபேத் மெக்காய், ஓடென் ஸ்மித் போன்ற சமீப காலங்களில் விளையாடி வரும் நட்சத்திரங்கள் இந்த அணியில் முக்கிய வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். முன்னதாக பணத்துக்காக தேசத்தை மறந்துவிட்டு விளையாடுபவர்களிடம் பிச்சை எடுக்க முடியாது என்று சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிமன்ஸ் வேதனை தெரிவித்திருந்தார்.

அவருடைய வேதனை இந்த அணியில் வெளிப்பட்டுள்ளது தெளிவாக தெரியும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இதோ:

நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் போவல் (துணை கேப்டன்), யானிக் காரிஷ், ஜான்சன் சார்லஸ், செல்டன் காட்ரல், சிம்ரோன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகில் ஹொசைன், அல்சாரி ஜோசப், ப்ரண்டன் கிங், எவின் லெவிஸ், கெய்ல் மேயர்ஸ், ரேய்மன் ரைபர், ஓபேத் மெக்காய், ஓடென் ஸ்மித்

Advertisement