
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 20 ஓவரில் பாகிஸ்தானை வெறும் 113 ரன்களுக்கு கட்டுப்படுத்தி மறக்க முடியாத வெற்றி பெற்றது.
முன்னதாக அந்த 2 போட்டிகளிலும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்கள் எடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
யாராவது சொல்லுங்க:
அதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் அவரை ஓப்பனிங் இடத்துக்கு பதிலாக 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய விராட் கோலி அதே மனநிலையுடன் இந்த உலகக் கோப்பையிலும் விளையாட வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக சவாலான பிட்ச்சில் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய பழைய விராட் கோலி இந்திய அணிக்கு தேவைப்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியிடம் இருக்கும் பிரச்சனை என்னவெனில் கடந்த 2 வருடங்களாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகமாக பேசப்பட்டது. இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் அதை அவர் முற்றிலுமாக மாற்றினார்”
“மற்ற வீரர்கள் 200 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடிய போது அவர் குறைந்தபட்சம் 150 தொட்டார். ஆனால் தற்போது அது வித்தியாசமான விவாதம். அவர் டி20 உலகக் கோப்பைக்கும் அதே மனநிலையுடன் வந்திருக்க வேண்டும். குறிப்பாக இங்கே கொடுக்கப்படும் பிட்ச்களில் பழைய விராட் கோலியை பார்ப்பது சிறந்ததாக இருக்கும்”
இதையும் படிங்க: விளையாடிய மழை.. இலவசமாக 1 புள்ளி கிடைத்தும்.. 2014 டி20 சாம்பியன் இலங்கைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
“எனவே ஆரம்பத்தில் இருந்த விராட் கோலியை இப்போது பார்க்க வேண்டும் என்று யாராவது அவரிடம் சொல்ல வேண்டும். பிட்ச் ஃபிளாட்டாக மாறும் போது அவர் மீண்டும் தற்போதைய அணுகு முறையை பின்பற்றலாம்” என்று கூறினார். இந்த நிலையில் இந்தியா தங்களுடைய அடுத்தப் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அப்போட்டி ஜூன் 12ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.