மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து 82 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா 3, கேஎல் ராகுல் 24, விராட் கோலி 36 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதே போல் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் 28, ஜடேஜா 17 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
காப்பாற்றிய ஜோடி:
அதனால் 221-7 என தடுமாறிய இந்தியா மீண்டும் ஃபாலோ ஆன் தவிர்க்க போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நித்திஷ் ரெட்டி மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர். அதில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் நிதானமாக விளையாடிய நிலையில் நித்திஷ் ரெட்டி தேவையான சமயங்களில் பவுண்டரிகளை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
நேரம் செல்ல செல்ல அட்டகாசமாக விளையாடிய இந்த ஜோடி இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றியது. தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியில் வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்து 50 (162) ரன்கள் குவித்து 8வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டானார். இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் 8வது விக்கெட்டுக்கு 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை அவர்கள் படைத்தனர்.
இந்தியா கம்பேக் கொடுக்குமா:
இதற்கு முன் 2008ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த பும்ரா டக் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய நித்திஷ் ரெட்டி சதத்தை அடித்து அமர்க்களம் செய்தார்.
இதையும் படிங்க: மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போக வழி இருக்கா? – விவரம் இதோ
அப்போது நிறைவுக்கு வந்த மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 358-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. களத்தில் நிதிஷ் 105*, சிராஜ் 2* ரன்களுடன் உள்ளார்கள். தற்போதைய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் போராடினால் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு இந்தியா வந்துள்ளது.



