ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக நித்திஷ் ரெட்டி அறிமுகமாகி விளையாடுகிறார். 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் பெரியளவில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. அதன் காரணமாக இத்தொடரில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் அவரால் அசத்த முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் இதுவரை 4 போட்டிகளில் அவர் 294 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
குறிப்பாக முதல் போட்டியிலேயே 42, 38* ரன்கள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதை விட நான்காவது போட்டியில் சரிவில் சிக்கிய இந்தியாவை வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அந்தப் போட்டியில் 114 ரன்கள் குவித்த அவர் மெல்போர்ன் மைதானத்தில் 8வது இடத்தில் களமிறங்கி சத்தத்தை அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார்.
கொடிக்கு வணக்கம்:
அப்போது தன்னுடைய பேட்டை களத்தில் ஊன்றி அதில் ஹெல்மெட்டை வைத்து வானத்தை நோக்கி நிதிஷ் ரெட்டி கொண்டாடியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் இந்திய தேசிய கொடிக்கு வணக்கத்தை செலுத்தும் வகையிலேயே அவ்வாறு கொண்டாடியதாக நித்திஷ் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய திறமையை சந்தேகித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சதத்தை அடித்த பின் என்னுடைய வேட்டை களத்தில் நட்டேன். அதில் ஹெல்மெட்டை வைத்தேன். அந்த வகையில் இந்திய கொடிக்கு வணக்கம் செலுத்தினேன். நாட்டுக்காக விளையாடுவது எனக்கு மிகப்பெரிய உத்வேகம். அது மறக்க முடியாதது. ஐபிஎல் தொடரில் இருந்து வந்த இந்த இளம் வீரரால் இது போன்ற பெரிய தொடரில் அசத்த முடியுமா என்று சிலர் என்னை சந்தேகப்பட்டார்கள்”
ஆல் ரவுண்டராக:
“அவர்களை இங்கே தவறு என்று நான் நிரூபிக்க விரும்பினேன். இந்திய அணிக்காக 100% பங்களிப்பை கொடுக்கவே இங்கே இருக்கிறேன் என்பதை மக்கள் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எனக்கு ஓரிரு மாதங்களில் வாய்ப்பு கிடைத்ததாக தெரியும். ஆனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க இரண்டு மூன்று வருடங்கள் தேவைப்பட்டது”
இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டின் உருட்டு இதானா? பும்ராவை விட பாபர் சிறந்தவராக தீர்மானித்த ஐசிசியை விளாசும் ரசிகர்கள்
“அந்த காலங்களில் நான் என்னுடைய பேட்டிங்கில் கடினமாக வேலை செய்தேன். இப்போதும் என்னுடைய பந்து வீச்சில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அதில் பயிற்சிகளை எடுத்து இந்திய அணிக்காக ஆல் ரவுண்டராக வர விரும்புகிறேன். ஆல் ரவுண்டராக செயல்படுவதற்கு ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். அதற்கு என்னை நானே தள்ளிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.