இந்திய கிரிக்கெட் அணிக்காக ஹைதராபாதத்தைச் சேர்ந்த இளம் வீரர் நித்திஷ் ரெட்டி அறிமுகமாகி விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அசத்திய அவர் ஆட்டநாயகன் விருதை வென்றதால் தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக தேர்வானார்.
அந்த வாய்ப்பிலும் தனது முதல் போட்டியிலேயே 41 ரன்கள் குவித்த அவர் ஒரு விக்கெட் எடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கு தம்முடைய பங்காற்றினர். அந்த வகையில் வருங்காலங்களில் இந்தியாவுக்காக அசத்தக்கூடிய ஆல் ரவுண்டராக அவர் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் கிரிக்கெட்டில் அசத்துவதற்காக தம்முடைய அப்பா அவருடைய வேலையை விட்டு வேறு நகருக்கு வந்து தமக்கு ஆதரவாக இருந்ததாக நித்திஷ் ரெட்டி கூறியுள்ளார்.
தந்தையின் ஆதரவு:
ஆனால் வேலையை விட்டதால் ஏற்பட்ட கடினமான சூழ்நிலையால் ஒருநாள் அவர் அழுததை தாம் பார்த்ததாகவும் நித்திஷ் ரெட்டி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது அவருடைய உழைப்பை வீணடிக்காத வகையில் தாம் இந்தியாவுக்காக விளையாடி தந்தையை பெருமையடைய வைத்துள்ளதாகவும் நிதிஷ் ரெட்டி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“உண்மையில் இளம் வயதில் இருந்த போது நான் இவ்வளவு சீரியஸாக இல்லை. எனக்காக என்னுடைய தந்தை அவருடைய வேலையை விட்டார். என் பின்னணியில் நிறைய தியாகங்கள் உள்ளன. ஒரு நாள் பொருளாதார பிரச்சினை காரணமாக என்னுடைய தந்தை அழுவதை பார்த்தேன். அப்போது எனது தந்தை தியாகத்தை செய்யும் போது நாம் கிரிக்கெட்டை வெறும் ஜாலிக்காக விளையாடக்கூடாது என்று உணர்ந்தேன்”
பெருமையுடன் நிதிஷ்:
“அந்த நேரத்திலிருந்து மிகவும் கடினமாக பயிற்சிகளை எடுத்த நான் வளர்ச்சியை பெற்றது தற்போது வெற்றியை கொடுத்துள்ளது. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மகனாக என்னுடைய தந்தை தற்போது மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய முதல் ஜெர்சியை நான் அவருக்கு கொடுத்தேன். அப்போது அவருடைய முகத்தில் பெரிய மகிழ்ச்சியை பார்த்தேன்”
இதையும் படிங்க: இது இல்லனா போதும்.. உலக முழுவதும் இந்திய அணியில் சுந்தருக்கு வாய்ப்பு கொடுப்போம்.. ரோஹித் பாராட்டு
“அதனால் நானும் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். இதை அடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வென்று முன்னிலையை அதிகரிக்க இந்திய அணி போராட உள்ளது.



