வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தலைநகர் டெல்லியில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 221-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 74 (34), ரிங்கு சிங் 53 (29), ஹர்டிக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதைத்தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் மீண்டும் சுமாராக விளையாடி 20 ஓவரில் 135-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமதுல்லாஹ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2, நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியிலும் இந்தியா வென்றது.
ஆட்டநாயகன் நிதிஷ்:
அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 41-3 என இந்தியா தடுமாறிய போது 74 ரன்கள் அடித்ததுடன் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய நித்தீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தனைக்கும் கடந்த போட்டியில் அறிமுகமான அவர் இரண்டாவது போட்டியிலேயே விருது வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாடி இப்படி ஆட்டநாயகன் விருது வெல்வதை பெருமையாக கருதுவதாக நித்திஷ் ரெட்டி கூறியுள்ளார். மேலும் பயமின்றி விளையாடுவதற்கான சுதந்திரத்தை கேப்டன் சூரியகுமார், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தமக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக விளையாடுவதை சிறப்பாக உணர்கிறேன்”
லைசென்ஸ் கொடுத்தாங்க:
“இந்த தருணத்திற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்துக்கும் நன்றி உடையவனாக இருக்கிறேன். இதற்கான பாராட்டு கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நான் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் பயமின்றி விளையாடும் உரிமத்தை எனக்கு கொடுத்தனர். ஆரம்பத்தில் நான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டேன். ஆனால் அந்த நோபாலுக்கு பின் அனைத்தும் எனக்கு சாதகமாக அமைந்தது”
இதையும் படிங்க: வங்கதேசத்திடம் இதை வேணும்ன்னே செஞ்சு பாத்தேன்.. ஜெர்ஸி மட்டும் மாறும்ன்னு சொல்லிருக்கேன்.. சூரியகுமார் பேட்டி
“இந்திய அணிக்காக விளையாடுவது மிகச்சிறந்த உணர்வை கொடுக்கிறது. இதே வழியில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். இதே போன்ற செயல்பாடுகளை இந்திய அணிக்காக மீண்டும் மீண்டும் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் சவால் விடுத்த வங்கதேசத்தை மீண்டும் இளம் வீரர்களை வைத்தே தோற்கடித்துள்ள இந்திய அணி தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது



