கவலை வேண்டாம் கப் நமதே! மும்பை ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக் கொடுத்த நீதா அம்பானி – பேசியது என்ன?

Nita Ambani MI
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தை தொட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்த நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. அதிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற சரித்திரத்தை படைத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இதுவரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து 9-வது இடத்தில் தவித்து வருகிறது.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறும் நிலையில் சொந்த மண்ணில் விளையாடும் இதர அணிகளுக்கு கிடைக்காத பொன்னான வாய்ப்பு மும்பைக்கு மட்டும் கிடைத்துள்ளது. ஆனால் அந்த அற்புத வாய்ப்பை பயன்படுத்த தவறிய அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தடுமாறி நிற்கிறது.

- Advertisement -

மீண்டெழுமா மும்பை:
இந்த வருடம் அந்த அணிக்கு இஷான் கிசான், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரால் பேட்டிங் துறை ஓரளவுக்கு வலுவாக உள்ளது. ஆனால் பந்துவீச்சு துறைதான் அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சு படு மோசமாக திண்டாடி வருகிறது. அதிலும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கைகொடுக்கும் வகையில் வேறு ஒரு நல்ல தரமான பவுலர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதுபோல் சுழல் பந்து வீச்சிலும் தமிழக வீரர் முருகன் அஸ்வினுக்கு கைகொடுக்கும் வகையில் மற்றொரு தரமான பவுலர் இல்லை.

சமீபத்தில் நடந்த ஏலத்தின்போது ஒரு சில முக்கியமான வீரர்களை அந்த அணி இழந்தது இதற்கு காரணமாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த வருடம் வரை ட்ரெண்ட் போல்ட், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா போன்ற வீரர்களால் அந்த அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த இடத்தில் டேனியல் சாம்ஸ், பாசில் தம்பி போன்ற ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பவுலர்கள் தான் இருக்கின்றனர். எனவே அது போன்ற வீரர்களை வைத்துக்கொண்டு இதிலிருந்து எப்படி அந்த அணி மீண்டு வரப்போகிறது என்ற கவலை அந்த ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

கவலை வேண்டாம்:
இந்நிலையில் தொடர் தோல்விகளால் கவலை வேண்டாம் இதிலிருந்து நம்மால் மீண்டெழ முடியும் என மும்பை அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி நம்பிக்கை ஊட்டியுள்ளார். இதுபற்றி மும்பை நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்கள் அனைவரின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது என்பதால் கண்டிப்பாக நம்மால் இதிலிருந்து வெளிவர முடியும். இனிமேல் நாம் முன்னோக்கி வெற்றி நடை மட்டுமே போட போகிறோம். இந்த இலக்கை நம்மால் அடைய முடியும் என்ற எண்ணத்தை நாம் ஆழமாக நம்ப வேண்டும். இதற்கு முந்தைய காலகட்டங்களில் இது போன்ற கடினமான தருணங்களில் தத்தளித்த நாம் அதன்பின் சிறப்பாக செயல்பட்டு கோப்பையையும் வென்றுள்ளோம். எனவே உங்கள் அனைவரின் மீதும் நான் நம்பிக்கையாக உள்ளேன். நீங்கள் அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் கோப்பையை வெல்ல முடியும்.”

“அப்போது உங்களை வெற்றி கொண்டாட்ட தருணங்களில் நான் பார்ப்பேன் அதுவரை உங்கள் அனைவருக்கும் தேவையான ஆதரவை நான் வழங்குகிறேன். தயவு செய்து அனைவரும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுக்காக மும்பை இந்தியன்ஸ் எப்போதும் உதவ தயாராக உள்ளது” என எனர்ஜி டானிக்கை போல மும்பை வீரர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

- Advertisement -

2014, 2015 மேஜிக் நிகழ்த்துமா:
அவர் கூறுவது போல இதுபோன்ற தருணங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிதல்ல. ஏனெனில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடப்பு சாம்பியனாக விளையாடிய அந்த அணி இதைவிட மோசமாக தனது முதல் 5 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த போதிலும் அதற்காக அசராமல் அடுத்த போட்டிகளில் வரிசையாக வெற்றியைப் பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க : குட்டி சேவாக்கை போல பவுலர்களை புரட்டி எடுக்கும் இளம் இந்திய வீரர் – சேவாக்க்கு பின் புதிய மைல்கல்

அந்த வருடம் கோப்பையை வெல்ல விட்டாலும் அதற்கு அடுத்த 2015ம் ஆண்டும் இதே போல் முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த அந்த அணி அதற்கு அடுத்து நடந்த 10 போட்டிகளில் வரிசையாக 8 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் கோப்பையையும் வென்று சாதனை படைத்தது. எனவே அதேபோன்தொரு மேஜிக்கை இந்த வருடமும் அந்த அணி நிகழ்த்திய கோப்பையை வெற்றி பெறுவதற்கு போராடும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement