
இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட 2024 ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 11ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் 27வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மற்றும் நார்த்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 100 பந்துகளில் 152/7 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் பில் சால்ட் 61 (28), ஜெமி ஓவர்ட்டன் 21* (21) ரன்கள் எடுத்த நிலையில் சூப்பர் சார்ஜர்ஸ் சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 153 ரன்களை துரத்திய சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே மேத்யூ ஷார்ட் ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்த சில பந்துகளில் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்ரோக்ஸ் காயமடைந்து வெளியேறினார்.
நொறுக்கிய பூரான்:
போதாகுறைக்கு அடுத்ததாக வந்த ஓலி ராபின்சன் 12 ரன்னில் அவுட்டானதால் 29/6 என ஆரம்பத்திலேயே சூப்பர் சார்ஜர்ஸ் அணி தடுமாறியது. ஆனால் அப்போது களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் கொஞ்சம் நிதானமாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் சேர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹாரி ப்ரூக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (26) ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அவர் அவுட்டான பின் ருத்ரதாண்டவம் ஆடிய நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் சிக்ஸர்களை பறக்க விட்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக ஸ்காட் கர்ரி வீசிய 74வது பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் அவர் 113 மீட்டர் மெகா சிக்ஸராக பறக்க விட்டது வர்ணனையாளர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இறுதியில் அவருடைய அதிரடியையும் தாண்டி சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்கு கடைசி 10 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி வீசிய 91, 92, 93, 94, 95வது பந்துகளில் முறையே 4, 6, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்ட பூரான் மொத்தம் 2 பவுண்டரி 8 சிக்ஸருடன் 66* (33) ரன்களை 200 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அவருடன் எதிர்புறம் ஆடம் ஹோஸ் 27* (14) ரன்கள் எடுத்ததார். அதனால் 97பந்துகளிலேயே 156/3 ரன்கள் எடுத்த சூப்பர் சார்ஜர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: துலீப் கோப்பையிலும் டாட்டா.. புஜாரா, ரஹானேவின் கேரியரை முடிக்கும் பிசிசிஐ.. வாய்ப்பு பெறும் 2 புதுமுக வீரர்கள்
அந்த வகையில் கடைசி 37பந்துகளில் 118 ரன்கள் அடித்து சூப்பர் சார்ஜர்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இங்கிலாந்திலும் தன்னுடைய ஆட்டத்தை விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து முக்கிய பங்காற்றிய நிக்கோலஸ் பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.