ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் 64வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அபாரமாக விளையாடி 236 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் சதமடித்து 117 (64), நிக்கோலஸ் பூரான் 56* (27) ரன்கள் விளாசினர்.
அடுத்து விளையாடிய குஜராத்தை சிறப்பாக பௌலிங் செய்த லக்னோ 20 ஓவரில் 202/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தமிழகத்தின் சாருக்கான் 57, ரூதர்போர்ட் 38 ரன்கள் எடுத்து போராடினார். லக்னோவுக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓ’ரோர்க்கே 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.
தேவையற்ற ஸ்லெட்ஜிங்:
இதையும் சேர்த்து ஏற்கனவே வெளியேறிய லக்னோ 6வது ஆறுதல் வெற்றியைப் பெற்றது. மறுபுறம் 6வது தோல்வியை சந்தித்த குஜராத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் மிடில் ஓவர்களில் வெளுத்து வாங்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது 16வது ஓவரை குஜராத் அணியின் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மார்ஷ் 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 3வது பந்தை எதிர்கொண்ட பூரான் பவுண்டரி அடித்தார். அதனால் கடுப்பான சிராஜ் அடுத்த பந்தை பவுன்சராக போட்ட நிலையில் பூரான் அடிக்கத் தவறினார். அந்த பந்தை நடுவர் ஒயிட் கொடுத்தார். அப்போது பூரான் அருகே சென்ற சிராஜ் ஏதோ சில வார்த்தைகளை சொல்லி ஸ்லெட்ஜிங் செய்தார்.
மாஸ் பதிலடி:
அதற்கு பூரான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதைத்தொடர்ந்து சிராஜ் மீண்டும் துல்லியமான பவுன்சர் பந்தை வீசினார். அதை அடிக்கத் தவறிய பூரானிடம் மீண்டும் சென்ற சிராஜ் தேவையின்றி சில வார்த்தைகளைப் பேசினார். அப்போதும் அமைதியாகவே இருந்த பூரான் அதற்கடுத்த பந்தில் முரட்டுத்தனமான சிக்சரை தெறிக்க விட்டு கடைசி பந்தில் பவுண்டரியை பறக்க விட்டு சிராஜுக்கு மாஸ் பதிலடி கொடுத்து ஓவரை முடித்தார்.
இதையும் படிங்க: டெய்லி 150 மெசஜ்.. எப்படியாச்சும் ஆர்சிபி கோப்பை ஜெய்க்கக் கூடாதுன்னு சொல்றாங்க.. பென் கட்டிங் பேட்டி
இறுதியில் சிராஜ் தோளிலும் தலையிலும் தட்டிக்கொடுத்த நிக்கோலஸ் பூரான் ஜென்டில்மேனாக நடந்து கொண்டார். அதை ம்ப பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் தேவையா? என்று முகமது சிராஜ் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் தற்போது நிக்கோலஸ் பூரான் சூப்பரான ஃபார்மில் இருக்கிறார். அப்படிப்பட்ட அவரிடம் மோதியதற்காக சிராஜ் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



