வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதே போல ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலும் அதிரடி சரவெடியாக விளையாடிய அவர் நவீன கிரிக்கெட்டில் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
அதே காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெறாத பூரான் தற்போது வெறும் 29 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. மொத்தம் 61 ஒருநாள், 106 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 4000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இது பற்றி தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
29 வயதில் ஓய்வு:
“நிறைய சிந்தனைகளுக்குப் பின் நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். இந்த விளையாட்டு மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் மேற்கிந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு போன்ற பலவற்றைக் கொடுத்துள்ளது. அது தொடர்ந்து கொடுக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒவ்வொரு முறை தேசிய கீதத்திற்காக நின்று களத்தில் இறங்கும் போதும் என்னுடைய அனைத்தையும் கொடுத்தேன்”
“அதை என்னால் வார்த்தைகளால் சொல்வது கடினம். அதை விட கேப்டனாக எங்கள் அணியை வழி நடத்தியது எனது இதயத்துக்கு நெருக்கமாக கிடைத்த பாக்கியம். எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. கடினமான நேரங்களில் என்னை தூக்கிய நீங்கள் நல்ல நேரங்களில் பொருத்த முடியாத ஆர்வத்தால் கொண்டாடினீர்கள்”
ரசிகர்கள் சோகம்:
“எனது பயணத்தில் சேர்ந்து நடந்த என்னுடைய குடும்பம், நண்பர்கள், சக வீரர்கள் ஆகியோருக்கும் நன்றி. எனது சர்வதேச கேரியர் முடிவடைந்தாலும் மேற்கிந்திய அணிகள் மீதான அன்பு ஒருபோதும் மங்காது. எங்கள் அணிக்கும் பிராந்தியத்திற்கும் வெற்றி மற்றும் வலிமையை தவிர வேறு எதுவுமில்லை என்று நான் விரும்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கிரேட் ஃபினிஷர் எம்எஸ் தோனிக்கு ஸ்பெஷல் விருதை வழங்கி கௌரவித்த ஐசிசி.. 11வது இந்தியராக சாதனை
மொத்தத்தில் 29 வயதிலேயே ஓய்வு பெறுவதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. இருப்பினும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாடுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். சமீபத்தில் ஹென்றிச் க்ளாஸென் 33 ஓய்வு பெற்றதைப் போல தற்போது நிக்கோலஸ் பூரானும் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



