பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது பெரிய தவறாக மாறியது. ஏனெனில் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் சொதப்பிய இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்துக்கு கேப்டன் டாம் லாதம் 15, வில் எங் 33, மிட்சேல் 18, கிளன் பிலிப்ஸ் 14 ரன்களில் அவுட்டாகி சென்றனர்.
நியூஸிலாந்து சாதனை முன்னிலை:
ஆனால் துவக்க வீரர் டேவோன் கான்வே மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து சதத்தை நழுவ விட்டாலும் 91 ரன்கள் குவித்தார். அவரை விட மிடில் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா சதமடித்து 134 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் டிம் சௌதீ அதிரடியாக 65 (73) ரன்கள் எடுத்ததால் நியூசிலாந்து 402 ரன்கள் குவித்து அசத்தியது.
அதனால் இந்தியாவை விட நியூசிலாந்து 356 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் முதல் முறையாக 300க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாகப் பெற்று நியூஸிலாந்து சாதனை படைத்தது. அத்துடன் இந்தியாவில் 3வது அதிகபட்ச ரன்களை முன்னிலையாக பெற்ற வெளிநாட்டு அணியாகவும் நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.
போராடும் இந்தியா:
அந்தப் பட்டியலில் முதலிடத்தில் 2008 அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 418 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாபிரிக்காவும், 2வது இடத்தில் 1985 சென்னை போட்டியில் 380 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்தும் உள்ளன. மறுபுறம் சுமாராகவே பந்து வீசிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிங்க: ரத்த சொந்தம் விட்டுப்போகுமா? சொந்த மண்ணில் சாதித்து காட்டிய ரச்சின் ரவீந்திரா – ஸ்பெஷல் கேம் தான்
அதைத் தொடர்ந்து விளையாடும் இந்தியா 3வது நாள் தேனீர் இடைவெளியில் 57-0 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று இந்தியா பேட்டிங் செய்த போது மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதே 46க்கு ஆல் அவுட்டாக முக்கிய காரணமானது. தற்போது மீண்டும் பெங்களூருவில் அதே போன்ற சூழ்நிலை நிலவுகிறது. அதனால் இயற்கையும் இப்படி இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறதே என்று ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.



